கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும் ரெயில்களை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ரெயில்வே வாரியம்  அறிவித்து உள்ளது.

இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ரெயில்வே துறை சமூக பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

சமீபத்தில், கிழக்கு ரயில்வே வர்த்தக மேலாளர் மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.  அதில், தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் ரெயில்களை ரத்து செய்ய அரசு முடிவு எடுத்துள்ளதாகவும், அந்த ரெயில் சேவை தொடர்ந்து நடைபெற வேண்டுமென்றால், இழப்புத்தொகையில் பாதியை மாநில அரசு ஏற்க வேண்டும் என்று கூறப்படடுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி, மக்களுக்கு சேவை செய்து வரும் ரெயில்வே துறை சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும், ரெயில்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், ஏற்கனவே மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த அரசு சு வாங்கிய கடனுக்காக ஆண்டுதோறும் 50 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மத்திய அரசு, மேற்கு வங்கத்திடம் இருந்து பெற்று வருவதாகவும், மேலும் பல்வேறு மாநில திட்டங்களுக்கான நிதியை குறைத்துவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.