மும்பை:
2005ம் ஆண்டு குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீசார் நடத்திய போலி என்கவுண்ட்டரில் தீவிரவாதி என்று போலீசாரால் அடையாளம் காணப்பட்ட சோஹ்ரபுதீன் ஷேக் என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 2010ம் ஆண்டு பிப்ரவரியில் சிபிஐ தனது விசாரணையை தொடங்கியது.
இதில் பாஜக.வின் தற்போதைய தலைவர் அமித்ஷா உள்பட 22 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் இருந்து அமித்ஷா மற்றும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை சிபிஐ நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு மாரடைப்பு என்று கூறப்பட்டாலு, இதில் சந்தேகம் இருப்பதாக நீதிபதியின் குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த் வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டதை மேல்முறையீடு செய்யாத சிபிஐ மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மும்பை நகர வக்கீல்கள் சங்கம் சார்பில் அகமது அபிதி என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
‘‘பல வழக்குளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றங்கள் விடுவித்தபோது அதை எதிர்த்து சிபிஐ மேல் முறையீடு செய்துள்ளது. ஆனால், 2014ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ மேல் முறையீடு செய்யவில்லை. அதனால் அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுபரிசீலனை மனு தாக்கல் செய்ய சிபிஐ.க்கு உத்தரவிட வேண்டும்’’ என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி ரேவதி மோஹிதி திரே வரும் 23ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.