சண்டிகர்:
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் இருந்த ஆயிரத்து 584 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் 79.44 சதுர கி.மீ., பரப்பளவு பல்வேறு பணிகளுக்காக வழங்கப்பட்டுவிட்டது. 2015-15 மற்றும் 20161-17ம் ஆண்டு காலங்களில் இந்த தாரைவார்ப்பு நடந்தது. உள்கட்டமைப்பு, தொழிற்சாலை திட்டங்களுக்காக இந்த நிலங்கள் ஒதுக்கப்பட்டது.
இவ்வாறு அழிக்கப்பட்ட வனப்பகுதியின் பரப்பளவு என்பது டில்லி லோதி கார்டன்ஸ் பரப்பளவை போல் 200 மடங்கும், மும்பை நரிமன் பாயின்டை போன்று 900 மடங்கு பரப்பளவையும் கொண்டதாகும். இந்த தகவல் லோக்சபாவில் மத்திய அரசு அளித்த எழுத்துப்பூர்வ பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் உள்ள நிலப்பரப்பில் 3 சதவீத (டில்லியின் மொத்த பரப்பளவு அளவு) வனப்பகுதியை இதர பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ததில் ஹரியானா முதல் மாநிலமாக உள்ளது. இவ்வாறு வனப்பகுதியை கொடுத்துவிட்டு தற்போது காடு வளர்ப்பு திட்டத்திற்காக மத்திய அரசிடம் நிதி கேட்டு வருகிறது.
‘கேம்பா’ என்ற காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு காடு வளர்ப்புக்கு 10 சதவீதம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஹரியானா அரசு தற்போது மத்திய சுற்றுசூழல், வனம், பருவ நிலை மாற்ற அமைச்கத்திடம் வலியுறுத்தி வருகிறது.
தேசிய வன கொள்கையின் கீழ் சம நிலப்பரப்புகளில் 20 சதவீதம் வனம் மற்றும் மரங்கள் நிறைந்து இருக்க வேண்டும். இந்தியாவில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு காடுகளை உருவாக்க வேண்டும் என்று தேசிய வன கொள்கையின் காடு மேலாண்மை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹரியானாவை தொடர்ந்து தெலங்கானா, மத்திய பிரதேஷ், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இதுவரை 560.69 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட வனப்பகுதியை இதர பணிகளுக்கு திருப்பிவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் 50 சதவீத வனப்பகுதியை இதர பணிகளுக்கு ஒதுக்கீடு செய்துவதிட்டது. கடந்த 3 நிதியாண்டுகளில் ஹரியானா 105 கோடி ரூபாய் நிதியை கேம்பாவிடம் இருந்து பெற்றுள்ளது என்று லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது.