ராஞ்சி:

88 ஆண்டுகளாக தினமும் ஒரு கிலோ மண் சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் வாழுகிறார் ஒரு முதியவர்.

ஜார்கண்ட் மாநிலம் சாகேப்கஞ் மாவட்டத்தை சேர்ந்த காரு பஸ்வான் (வயது 99). இவருக்கு விசித்திரமான மண் சாப்பிடும் பழக்கம் உருவாகியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘11 வயது இருக்கும் போது வறுமை காரணமாக மண் சாப்பிட தொடங்கினேன். காலபோக்கில் அது தினசரி வேலையாகவும், ஒரு பழக்கமாகவும் மாறிவிட்டது. தினமும் ஒரு கிலோ அளவு வரை இந்த சாப்பிடக் கூடாத விஷயத்தை சாப்பிடுகிறேன்.

என்னுடைய நிதி நிலைமையால் விரக்தி அடைந்தேன். நான் 10 குழந்தைகளுக்கு உணவு வழங்கியாக வேண்டும். நான் சாக வேண்டும். அதற்காக தான் மண் சாப்பிட தொடங்கினேன். ஆனால், காலப்போக்கில் அதற்கு அடிமையாகிவிட்டேன். தற்போது மண் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை’’என்றார்.

இவரது மூத்த மகன் காரு சியாராம் பஸ்வான் கூறுகையில், ‘‘குடும்ப உறுப்பினர்கள் அவர் மண் சாப்பி டுவதை பல முறை நிறுத்த முயற்சி செய்தோம். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. பல இடங்களில் இருந்து மண் எடுத்து வந்து சாப்பிடுகிறார்’’ என்றார்.

இதில் ஆச்சர்யம் என்ன என்றால், 88 ஆண்டுகளாக இவ்வளவு மண் சாப்பிட்ட பிறகும் அவர் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக 2015ம் ஆண்டு பீகாரின் சபோர் கிரிஷி வித்யாலயா இவருக்கு விருது வழங்கி கவுரவித்திருப்பது தான் கூடுதல் விசேஷம்.