சென்னை,
ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்து தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்கக்கோரி இந்து அமைப்புகள் சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்; மீண்டும் குற்றப்பரம்பரை ஆக்கிவிடாதீர்கள் என்று ஆவேசமாக பேசினார்.
கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்து குறித்து சர்ச்சை எழுந்து, அதன் காரணமாக இந்து அமைப்பினரால் போராட்டங்களும் நடைபெறு வருகின்றன. அதைத்தொடர்ந்து, வைரமுத்து, தான் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தார்.
ஆனால், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லையில் நடைபெற்ற இந்து அமைப்பினர் போராட்டத்தில் கலந்துகொண்ட, முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போது பாரதியஜனதாவின் துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசும்போது, இந்து மதத்தை யார் தவறாக பேசினாலும் அவர்களை கொலை செய்ய தயங்க கூடாது என்று தெரிவித்தார். கவிஞர் வைரமுத்து நாக்கை அறுத்தால் 10 கோடி ரூபாயை தர தொண்டர்கள் தயாராக உள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அவரது பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாக பேசிய இயக்குனர் பாரதிராஜா, ஆண்டாள் விஷயத்தில் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும் ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், வைரமுத்து நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.10 கோடி என முன்னாள் அமைச்சர் அறிவிக்கிறார் வைரமுத்து நாக்கிற்கு விலை வைத்த முன்னாள் அமைச்சரை கைது செய்ய வேண்டும் என்றும், வைரமுத்துவை இனி யாராவது வசை பாடி பாருங்கள் என்று ஆவேசமாக கூறினார்.
மேலும், பிள்ளையார் என்பவர் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள் என்று பேசிய பாரதிராஜா, எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்; மீண்டும் குற்றப்பரம்பரை ஆக்கிவிடாதீர்கள் என்றும், வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது என்றும் அவர் கூறினார்.