க்னோ

க்னோ நகரில் பள்ளிக் கூடக் கழிப்பறையில் ஒரு மாணவன் அதே பள்ளி மாணவியால் கத்தியால் குத்தப்பட்டுள்ளான்

கடந்த வருடம் குர்கானில் ரியான் சர்வதேச பள்ளியில் பிரத்யுமன் என்னும் மாணவன் கழிவறை அருகே கொல்லப்பட்டார்.   அவரை உடன் படித்த மற்றொரு மாணவரே கொலை செய்ததாக கைது செய்யப் பட்டு தற்போது வழக்கு நடந்து வருகிறது.   அதே போல உத்திரப் பிரதேசத்தில் லக்னோ நகரில் உள்ள ஒரு பள்ளியில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லக்னோ நகரில் உள்ள பள்ளிகளில் ஒன்று பிரட்லேண்ட் பள்ளி ஆகும் இங்கு ரித்திக் என்னும் மாணவன் ஒன்றாம் வகுப்பில் படித்து வருகிறான்.   ரித்திக்கின் தந்தை ராஜேஷ் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார்.  நேற்று முன் தினம் காலை ரித்திக் பள்ளியின் கழிப்பறைக்கு வெளியே கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளான்.    அவனை உடனடியாக சிகிச்சைக்கு பள்ளி நிர்வாகிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தற்போது நலமாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.      ரித்திக்கின் தந்தை ராஜேஷ், “பள்ளி நிர்வாகம் என் மகனுக்கு காயம் ஏற்பட்டதாக கூறியது.   நாங்கள்  போய் பார்த்த போது அவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.   தற்போது அதே பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் தன்னை கத்தியால் குத்தியதாக எங்கள் மகன் தெரிவித்துள்ளான்.    அவள் யார் என்பது தனக்கு தெரியாதென்றும்  ஆனால் அடையாளம் காட்ட முடியும் எனவும் கூறினான்” எனத் தெரிவித்தார்.

காயமடைந்த சிறுவனின் வாக்கு மூலத்தை அடிப்படையாகக் கொண்டு காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.     மாணவன் ரித்திக்கை கத்தியால் குத்திய மாணவியை தேடி வருகின்றனர்.