சியோல்

குளிர்கால ஒலிம்பிக் தொடரின் அணிவகுப்பில் வடக்கு மற்றும் தெற்கு கொரியா ஆகிய இரு நாட்டின் விளையாட்டு வீரர்கள் ஒன்றாக கலந்துக் கொள்கிறார்கள்

வட கொரியா மற்றும் தென் கொரிய நாடுகள் இடையே சீரான உறவு இல்லாதது தெரிந்ததே.    அடுத்த நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப்  போட்டிகளில் கலந்துக் கொள்ள இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தின.   அந்தப் பேச்சு வார்த்தை முடிவில் வட கொரியா விளையாட்டு வீரர்கள் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் இரு நாடுகளிடையே சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பலரும் கருதினர்.   அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.    பியோங்க்சங்கில் நடைபெற உள்ள இந்த ஒலிம்பிக் போட்டியின் அணிவகுப்பின் போது இரு கொரிய நாட்டு விளையாட்டு வீரர்களும் ஒரே கொடியை ஏந்திக் கொண்டு கலந்துக் கொள்ள உள்ளனர்.

அத்துடன் பனிச் சறுக்கு ஹாக்கி விளையாட்டின் பெண்கள் அணி இரு கொரிய நாட்டு வீராங்கனைகளும் கலந்துக் கொள்ளும் பொது அணியாக உருவாக்கப் பட உள்ளது.   அது மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைக்கான பயிற்சிகள் ஒன்றாக நடைபெறும் எனவும் தகவல்கள் வந்துள்ளது.    இந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது உற்சாகமூட்ட ஒரு 230 பேர் கொண்ட குழுவை வட கொரியா அனுப்ப உள்ளது.

அத்துடன் இருநாடுகளும் இணைந்து இசை நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்த உள்ளன.    அதற்காக 146 இசைக் கலைஞர்கள் அடங்கிய குழு ஒன்றை அனுப்ப இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.