டில்லி
இன்று நடைபெற உள்ள ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல், டீசல், கட்டுமானத்துறைப் பொருட்கள் ஆகியவை ஜி எஸ் டி வரம்புக்குள் கொண்டு வருவதைப் பற்றி விவாதிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
டில்லியில் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவாதிக்க 320 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை கவுன்சில் மெம்பர்கள் உருவாக்கி உள்ளனர். அதில் முக்கிய விவரங்கள் உள்ள 80 பக்கங்கள் நிதி அமைச்சகத்துக்கு நேற்று அனுப்பப் பட்டுள்ளது. இதை படித்து விட்டு அரசு விவாதத்தில் கலந்துக் கொள்ள வசதியாக ஒரு நாள் முன்பே அரசுக்கு அளிக்கப்பட்டதாக பஞ்சாப் மாநில நிதி அமைச்சர் கூறி உள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல், கட்டுமானப் பொருட்கள் ஆகியவைகளை ஜி எஸ் டி வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிய வந்துள்ளது. கட்டுமான பொருட்களான சிமெண்ட், பெயிண்ட், வார்னீஷ், மற்றும் பட்டி போன்ற பொருட்களுக்கு தற்போது 28% வரி விதிக்கப்பட்டு வருகிறது. இவைகளை ஜி எஸ் டி வரம்பில் குறைந்த அளவு வரி விதிப்பது பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஜி எஸ் டி அமுலாக்கத்துக்கு பிறகும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பழைய முறையிலே வரிகள் விதிக்கப்படுகின்றன. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் உற்பத்தி வரி, ஆயத் தீர்வை விதிப்பதோடு மாநில அரசுகள் வாட் மற்றும் விற்பனை வரிகள் விதித்து வருகின்றன. எனவே இவை அனைத்தும் நீக்கப்பட்டு ஜி எஸ் டி வரம்புக்குள் கொண்டு வர இன்று விவாதம் நடத்தப்பட உள்ளது.
கவுன்சில் கூட்டத்தின் முடிவில் இந்த விவாதங்களின் முடிவு அறிவிக்கும் போது மக்களும் எதிர்க்கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த ஜி எஸ் டி மாறுதல்கள் வருமா இல்லையா என்பது தெரிய வரும்.