சென்னை,

சென்னையில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட  கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டு வந்த நாதுராம் என்ற கொள்ளையனை ராஜஸ்தான் போலீசார் கடந்த 13ந்தேதி கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையின்போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் நாதுராமை தான் சுடவில்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

கொளத்தூரில், நகைக் கடையில் பட்டப்பகலில் கொள்ளையடித்து ராஜஸ்தான் தப்பிச் சென்ற கொள்ளை யர்களைப் பிடிக்க ஆய்வாளர் பெரியபாண்டியன் தலைமையிலான தனிப்படை ராஜஸ்தானில் முகாமிட்டிருந்தது. அப்போது  கொள்ளையர்கள் பதுங்கி உள்ளது குறித்த தகவல்கள் கிடைத்ததும் பெரியபாண்டியன் தலைமையிலான காவல்படையினர் கொள்ளையர்களை பிடிக்க முயன்னர். அப்போது, இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்.

தொடக்கத்தில், பெரிய பாண்டியனை சுட்டது கொள்ளையர்கள் என்று கூறப்பட்டது. பின்னர் ராஜஸ்தான் காவல்துறையினர், பெரிய பாண்டியன் உடலில் இருந்து எடுக்கப்பட்ட குண்டு தமிழக போலீசாருடைய என்று கூறியது. இதன் காரணமாக இந்த பிரச்சினை மேலும்  சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியின்போது,  பெரியபாண்டியனுடன் சென்ற கொளத்தூர்  ஆய்வாளர் முனிசேகர் கொள்ளையர்களை சுட்டபோது, அந்த குண்டு குறி தவறி பெரியபாண்டியன் மீது பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டவர்களில் சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், கொள்ளைக்கூட்ட தலைவன் நாதுராம் மட்டும் அகப்படாமல் இருந்து வந்தான். அவனையும் கடந்த 13ந்தேதி ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான்  மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை சுடவில்லை  என்று கூறி உள்ளதாக ராஜஸ்தான் போலீசார் தெரிவித்து உள்ளனர்.