டில்லி:

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் பேட்டி அளித்த விவகாரத்திற்கு பின்னா அரசியல் சதி இருக்கிறது என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்,‘‘ நீதிபதிகளின் பேட்டி திட்டமிட்டு சரியான நேரத்தில் அளிக்கப்பட்டுள்ளது. 1984ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி தொடங்க இருந்த சமயத்தில் இப்பிரச்னை வெடித்துள்ளது. குடிநீரில் விஷம் கலந்தவர்களை அடையாளம் காண வேண்டும். ஜனநாயகத்தின் ஒரு தூணை காயப்படுத்த முயற்சி செய்து தவறு இழைத்துள்ளனர்.

நீதிபதி லோயா மர்ம சாவு தொடர்பான கேள்வியை பேட்டியளித்த ரஞ்சன் கோகி காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. லோயா வழக்கு தொடர்பாக பிரச்னையை எழுப்ப ஒரு குறிப்பிட்ட கட்சி இந்த பேட்டியை பயன்படுத்திக் கொண்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘ஆர்எஸ்எஸ் சார்பில் நான் கருத்து தெரிவிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. பேட்டி அளித்தவர்களில் ஒரு நீதிபதி வீட்டிற்கு கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா சென்றுள்ளார். அதனால் இந்த பேட்டிக்கு பின்னால் பெரும் அரசியல் சதி இருக்கிறது’’ என்றார்.