மும்பை
மும்பை ஐஐடி மாணவர் விடுதியில் உள்ள அசைவம் சாப்பிடும் மாணவர்கள் சைவ மாணவர்களின் தட்டுக்களை உபயோகப் படுத்தக் கூடாது என மாணவர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை ஐ ஐ டியில் வழக்கமாக சைவ உணவு வழங்கப்படும். அசைவ உணவு தேவைப்படுபவர்கள் ரூ. 40 – ரூ 50 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். அந்த அசைவ உணவு ஒரு பிளாஸ்டிக் டிரே தட்டில் வழங்கப்படும். சைவ உணவு அவர்களே பரிமாறிக் கொள்ளும் பஃபே முறையில் வழங்கப்படுகிறது. அதற்கு தனியாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டுக்கள் உள்ளன
கடந்த 12 ஆம் தேதி அன்று உணவுவிடுதியை நிர்வகிக்கும் மாணவர் சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “அசைவம் சாப்பிடும் மாணவர்கள் பிளாஸ்டிக் தட்டுகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். சைவ உணவுக்கான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டுக்களை உபயோகப் படுத்தக் கூடாது. இது சைவம் சாப்பிடும் மாணவர்கள் உணர்வை புண்படுத்துவதாக உள்ளது. அதனால் மாணவர்கள் இவ்வாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்” என அறிவித்துள்ளது.
இது குறித்து அசைவம் சாப்பிடும் மாணவர்களில் ஒருவர், “மற்ற விடுதிகளில் இது போல சைவம், அசைவம் என தனித்தனி தட்டுகள் இருந்தாலும், ஐஐடி போன்ற ஒரு கல்வி நிறுவன விடுதிகளில் இது போல சட்டம் இருப்பது மிகவும் தவறானது. மேலும் இது மாணவர்கள் அமைப்பு உருவாக்கிய ஒரு சட்டமாக உள்ளது. நிர்வாகம் இதை தடை செய்யாமல் உள்ளது. விரைவில் இது ஒரு பிரச்சினையாக மாறக் கூடும்” என தெரிவித்துள்ளார்.
மற்றொரு மாணவர், “இதில் தவறு ஏதும் இருப்பதாக தோன்றவில்லை. நானும் அசைவம் சாப்பிடுபவர் தான். அசைவ உணவு பரிமாறப்பட்ட அதே தட்டுகளில் சாப்பிட சில சைவ மாணவர்கள் விரும்பாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏதும் பிரச்சினை செய்வது தேவையற்றது” எனக் கூறி உள்ளார்.
உணவு விடுதி பராமரிப்பு மாணவர் விடுதி செயலாளர் ரித்திகா வர்மா, “இந்தச் சட்டம் புதியது இல்லை. பழைய விதிமுறையை மீண்டும் நினைவு படுத்தும் நடவடிக்கை ஆகும். நானும் அசைவ உணவு சாப்பிடும் பெண் தான். எனக்கு இதில் ஏதும் மரியாதைக் குறைவு இருப்பதாக தெரியவில்லை. பல நாட்களாகவே அசைவ உணவுக்கு தனி தட்டுகள் இங்கு உள்ளது. சில மாணவர்கள் வேண்டுமென்றே சைவ உணவுக்கான தட்டுக்களில் அசைவ உணவு வைத்து சாப்பிடுவதைக் கண்டதால் இவ்வாறு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது” என கூறி உள்ளார்.