டில்லி:
ஜனாதிபதி தேர்தல் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் பங்கேற்க மாட்டார் என அக்கட்சி தலைமை அறிவித்தது.
காவிரி நதிநீர் மேலாண்மை குழுவை நியமிக்கமால் இழுத்தடித்துவரும் மத்திய அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பா.ம.க. தலைமை அறிவித்தது. இதனால் அன்புமணி ராமதாஸ் வாக்களிக்கவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காத அன்புமணி ராமதாசின் எம்.பி. பதவியை பறிக்க கோரி தமிழ்நாட்டை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னர் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘ஜனாதிபதி தேர்தலில் அன்புமணி ராமதாஸ் வாக்களிக்காமல் போய் இருக்கலாம். அதற்காக எம்.பி. பதவியில் இருந்து எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்?. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காவிட்டால் எம்.பி. பதவியில் நீடிக்க முடியாது என்று சட்டத்தில் குறிப்பிடப்பட வேண்டும்’ என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.