கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்துக்களிடையே எதிர்ப்பு நிலவி வருகிறது.
தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகள், பாரதியஜனதா கட்சியினர் இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து, வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தார். இந்நிலையிலும் பல இடங்களில் வைரமுத்து மீது வழக்கு பதியப்பட்டு வருகிறது.
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள வைரமுத்து பேச்சு குறித்து, அவர் மேற்கோள் காட்டிய ஆய்வுக் கட்டுரைக்கு உரிய பேராசிரியர் எம்ஜிஎஸ் நாராயணன், கூறும்போது, அதற்கான ஆதாரம் ஏதும் கிடையாது, இது வெறும் யூகம்தான் என்று கூறி உள்ளார்.
கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் – தேவதாசி என்று ஆங்கில கட்டுரையில் எழுத்தப்பட்டுள்ளது என்று கோடிட்டு காட்டிய அந்த நூலின் ஆசிரியர்தான் பேராசிரியர் எம்.ஜி.எஸ்.நாராயணன்.
இதுகுறித்து தந்தி டிவியின் நெறியாளர் தொலைபேசி வாயிலாக பேராசிரியருடன் நடத்திய உரையாடல்..
தாங்கள் எழுதியுள்ள தென்னிந்திய பக்தி இயக்கம் என்ற தலைப்பில் நீங்கள் எழுதியுள்ள கட்டுரை பற்றிய கேள்வி சார்..
கேள்வி: இந்த கட்டுரை எப்போது எழுதப்பட்டது? கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது கூற முடியுமா?
பதில்: இந்த கட்டுரை தென்னிந்திய பக்தி இயக்கங்கள் குறித்து தமிழில் எழுதப்பட்டது. இந்த கட்டுரையில் பக்தர்கள் வழிபடுவது குறித்தும், ஆழ்வார்கள் விஷ்ணுவை வழிபடுவது பற்றியும், நாயன்மார்கள் சிவனை வழிபடுவது குறித்தும், அவர்கள் எழுதிய பாடல்கள் போன்றவற்றை தொகுத்து எழுதப்பட்டது.
கேள்வி: இந்த கட்டுரை 1975ம் ஆண்டு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறதே? அது உண்மையா?
பதில்: ஆம். இந்த கட்டுரை சிம்லாவில் 175ம் ஆண்டு மாநாடு நடைபெற்றபோது வெளியிடப்பட்டது.
கேள்வி: இந்த கட்டுரை கேசவனுடன் இணைந்து தங்களால் எழுதப்பட்டது தானே?
பதில்: ஆம். கேசவன் என் மாணவர்.
கேள்வி: தாங்கள் எழுதியுள்ள கட்டுரையில் ஆண்டாள் என்பவர், ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்து வந்த ஒரு தேவதாசி என்று குறிப்பிட்டுள்ளீர்களே? அதற்கு ஆதாரம் ஏதும் உள்ளதா?
பதில்: இல்லை. ஆண்டாள் தேவதாசி என்பதற்கான எந்தவித குறிப்புகளும் கிடையாது. ஆனால், கடந்த 8, 9ஆம் நூற்றாண்டுகளில் இதுபோன்ற தீவிர பக்தைகளாக இருந்த பெண்கள் பலர் தேவதாசிகளாக இருந்திருக்கிறார்கள், அவர்கள் தன்னைத்தானே கடவுள் விஷ்ணுவின் மனைவியாக ஏற்றுக்கொண் டுள்ளார்கள். அதன் காரணமாகவே ஆண்டாள் குறித்து அவ்வாறு குறிப்பிட்டேன்.
கேள்வி: ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆவணங்கள் எதிலும் உள்ளதா? பாடல்களில் ஏதும் சொல்லப்பட்டுள்ளதா?
பதில்: இல்லை. அந்த காலக்கட்டங்களில் இறைவன வழிபட சிலர் பாடிய பாடல்கள்தான் தொகுக்கப்பட்டு தேவாரமாக பயன்படுத்தப்பட்டது. இது குறித்து இன்றும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
கேள்வி: இந்த கட்டுரைக்காக நீங்கள் ஆய்வு செய்தபோது, அதில் ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைத்ததா?
பதில்: இல்லை… இல்லை.. அதுபோல எந்தவொரு குறிப்பிடத்தக்க ஆதாரம் ஏதும் கிடையாது.
கேள்வி: ஆண்டாள் குறித்து ஸ்ரீரங்கம் கோவில் கல்வெட்டுகளில் ஏதேனும் ஆதாரம் கிடைத்ததா?
பதில்: இல்லை. வாய்மொழியாக சொல்வதை வைத்துதான் எழுதப்பட்டது. எழுத்துப்பூர்வான ஆதாரங்கள் ஏதும் கிடையாது.
கேள்வி: எந்தவிதமான உறுதியான மற்றும் நேரடியான ஆதாரங்களும் இல்லாத நிலையில், வாய்மொழியாக தாங்கள் கேட்டதின் வாயிலாகவே, அந்த முடிவை (தேவதாசி) தாங்கள் எடுத்திருப்பதாக கருதலாமா?
பதில்: இது ஒரு யூகம்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.