மும்பை,
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பீமா-கோரேகான் கலவரத்துக்கு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.
ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். புல்தானா மாவட்டத்தில் சிந்துகெத் பகுதிக்கு சென்ற அவர், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் தாயார் ராஜமாதா ஜீஜாபாய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார்.
அதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பாஜக அரசை கடுமையா குற்றம் சாட்டினார்.
நாட்டில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் ஜாதிய ரீதியிலான கலவரத்தை ஏற்படுத்தி வருவதாகவும், மக்களை பிரித்து கலவரத்தை உருவாக்கி வரும் பா.ஜ.க.வை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற பீமா-கோரேகான் கலவரத்துக்கு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும், மகாராஷ்டிராவில் கல்வியின் தரம் மிகவும் பின் தங்கி உள்ளதாகவும், ஏராளமான அரசு பள்ளிகள் மூடப்பட்டு வரும் அவலம் நிலவுகிறது என்றும் கூறினார்.
மாநில விவசாயிகளுக்கு உதவி செய்ய மறுத்து வரும் மகாராஷ்டிரா அரசு மகாராஷ்டிரா மாநில அரசு பட்ஜெட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது குறித்தும் கேள்வி எழுப்பினார்.
டில்லியில் பருவமழை பொய்த்து போனதால், பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 50,000 ரூபாய் வழங்கி வருவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.