தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களுக்கு இரண்டு லட்சியங்கள் அல்லது ஆசைகள் இருக்கும்.
இரட்டை வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற முதல் ஆசை நமக்கே தெரிந்ததுதான்.
இன்னொரு ஆசை…?.
எதாவது ஒரு படத்தில் வட சென்னைப் பையனாக நடிக்க வேண்டும் என்பது.
விக்ரம் ரொம்ப காலத்திற்கு முன்பே இளைஞனாக இருந்த போதே ’ஜெமினி’யில் நடித்து அந்த ஆசையை நிறை வேற்றிக் கொண்டாரே. இப்போது போய் ஏன் ஒரு வட சென்னைப் ’பையனாக’ நடிக்க ஆசைப்பட்டிருக்கிறார் என தெரியவில்லை.
அவர் ஆசைப்பட்டது தவறில்லை. ஆனால் அவருடைய இப்போதைய வயதிற்கேற்ற மாதிரியான கதையாக தேர்வு செய்திருக்க வேண்டும். வளரும் இளம் ஹீரோ ஒருவர் நடித்திருக்க வேண்டிய கதையில் தவறுதலாக தன்னைக் கொண்டு போய் பொருத்திக் கொண்டிருக்கிறார். சோ சேட்.
அடி, வெட்டு, குத்து, கத்தி, ரத்தம் இல்லாமல் ஒரு வட சென்னைக் கதையை எடுத்து விடக் கூடாது என்கிற முடிவிலிருக்கும் தமிழ் சினிமா இயக்குனர்களின் பட்டியலில் ’ஸ்கெட்ச்’ படத்தின் இயக்குனரும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.
வட சென்னையில் ஒரு வட்டிக் கடை சேட்டு இருக்கிறார். வாகனங்கள் வாங்குவதற்கு வட்டிக்குப் பணம் கொடுப்பவர். வட்டித் தவணையைக் கட்ட இயலாதவர்களின் வண்டிகளைத் தூக்கி வர ஒரு கூட்டத்தை வைத்திருக்கிறார். அந்த கூட்டத்தில் ஒருவர் ’ஸ்கெட்ச்’. ( ஏனெனில் அவர் வண்டிகளைத் தூக்க ஸ்கெட்ச் பொடுவதில் கில் கில்லாடி. என்பதால் அந்த பெயர். மற்றபடி ஜீவா என்ற பெயரை இரண்டு இடங்களில் சொல்கிறார்கள்..)
இப்படி வண்டி தூக்குவதில் இன்னொரு க்ரூப்பும் இருக்கிறது. இரண்டு கும்பலும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள்.
ஆரம்ப காலத்தில் சேட்டு வைத்திருந்த ஒரு பிரியமான காரை, ஒரு மோதலில் தூக்கிக் கொண்டு போன ராயபுரம் குமாரிடமிருந்து, அந்த காரை ஸ்கெட்ச் போட்டுத் தூக்குகிறார்கள் ஸ்கெட்ச்சும் அவருடைய நண்பர்களும்.
அதன் பிறகு அந்த நண்பர்கள் ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களை எல்லாம் கொலை செய்த ராயபுரம் குமாரை ஒரு பயங்கரமான ஸ்கெட்ச் போட்டுச் சாவடிக்கிறார் ஸ்கெட்ச்.
ஆனால், இறுதியில் ஸ்கெட்ச்சின் நண்பர்களை எல்லாம் கொலை செய்தது யார் என்று ஒரு சர்ப்ரைஸ் தருகிறார்.
அந்த சர்ப்ரைசைப் பார்த்த பிறகுதான் தோன்றியது. இந்த ஸ்கெட்ச்சை விக்ரமை வைத்துப் போட்டிருக்கக் கூடாது என..
அதற்கு வலுவான காரணங்கள் படத்திலேயே நிறைய இருக்கின்றன.
விகரம் ஒரு ஸ்கூட்டியைத் தூக்கப் போகும் இடத்தில் தமன்னாவைப் பார்க்கிறார். தமன்னாவைக் காதலிக்கத் தொடங்குகிறார். அவரைக் காதலிப்பதாக நண்பர்களிடம் பொய்யைப் புழுகுகிறார். அந்த பொய்யைக் காப்பாற்ற நாடமாடுகிறார். இடையிடையே கடுமையான டூயட் பாடல்களும் பாடுகிறார்.
இவையெல்லாம் இன்றைய விக்ரமுக்கான காட்சிகளா என்ன? விக்ரம் தமன்னாவிடம் காதலில் விழும் போதும் காதலில் தவிக்கும் போதும் சீயான் சேது நினைவுக்கு வந்து போகிறார். ( மாலை என் வேதனையை கூட்டுதடி….) அதே போல நடன அசைவு வேறு. அதே போல ஸ்ரீமனும் உடன் இருக்கிறார். வேதனை.
படத்தின் தொடக்க காட்சிகள், பலப் பல வட சென்னைக் கதைகளில் பார்த்துப் பழகிப் போன அதே காட்சிகள். விக்ரம் தப்பான ஒரு கதையை தேர்ந்தெடுத்து விட்டாரோ என்கிற நம் சந்தேகத்தை உறுதி செய்வது போலவே முதல் பாதி முழுக்க வழக்கமான காட்சிகளையே எழுதியிருக்கிறார்கள்.
ஆனால், இடைவேளைக்குப் பிறகு படம் சற்று விறு விறுப்பாக நகர்கிறது. அந்த விறு விறுப்பிற்கு முக்கிய காரணமாக அமைவது சுகுமாரின் படப்பதிவும் தமனின் பின்னணி இசையும். ரூபனின் படத்தொகுப்பும்.
குறிப்பாக நேர்த்தியான படப்பதிவு. சொதப்பலான காட்சிகளையும் கூட ரசிக்க வைக்கும் படியாக அமைந்திருக்கிறது.
தமனின் பாடல்களிலும் பெரிய பிரச்சினையில்லதான். ஆனால், அவை அடிக்கடி வருவது தான் பிரச்சினையாக இருக்கின்றன.
ரூபனின் படத்தொகுப்பு படத்தை கொஞ்சம் விறு விறுப்பாக்கி சுவாரசியப்படுத்த முயற்கிக்கிறது.
விக்ரம். முதலிலேயே சொல்லி விட்ட படியால் இது அவருக்கேற்ற கதையல்ல. ஆனாலும் அந்த பாத்திரத்திற்கு தன்னுடைய அலட்டிக் கொள்ளாத உடல் மொழியின் மூலம் வலு கூட்ட முயற்சித்திருக்கிறார்.
சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். சில காட்சிகளில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருகிறார். அது மேக்கப்பின் குறைபாடா அல்லது இருக்கட்டும் என்கிற துணிச்சலா என்று தெரியவில்லை.
அந்த இறுதிக் காட்சியின் சர்ப்ரைசிற்கு அவர் ஒத்துக் கொண்டதே ஒரு பெருந்தன்மைதான்.
சின்னப் பசங்களிடம் குத்துப் பட்டுச் சாவ எந்த மாஸ் ஹீரோ ஒத்துக் கொள்வார். ( நானும் எவ்வளவு நேரம்தான் க்ளைமேக்சை சொல்லாமல் இழுப்பது….)
அடுத்து கதாநாயகி தமன்னா. பார்ப்பனப் பெண்ணாக வந்து. வழக்கம் போல நாலஞ்சி பாடல்களுக்கு வந்து போகிறார். கடைசியில் வேறு ஒருவவனுடன் கல்யாணம் வேண்டாம் என்று மணவறையிலிருந்து எழுந்து வருகிறார். ஸ்ஸ்சபா….
(சமீபத்தில் வந்த ’மேயாத மான்’ படத்தில் கூட ஒரு பார்ப்பன பெண் ஒரு வட சென்னைப் பையனைக் காதலிப்பார் தானே! அட.. ஆமாம்.. கத்தின்றி ரத்தமின்றி வந்த வட சென்னை சினிமா அது தான் போல)
சேட்டாக வரும் ஹரீஷ் பரேடியை சந்தேகப்படும் படியாக காட்சிகளை அமைத்த விதம் ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
ஆமாம்… அந்த புதிய போலிஸ் அதிகாரி எதற்கு வருகிறார். எதற்காக அவருக்கு அந்த பில்ட் அப் ?
விக்ரமின் மூன்று நண்பர்களின் பாத்திரம் சற்று உணர்ச்சி மயமாகத்தான் இருக்கிறது.
இம்மாதிரி சில காட்சிகளின் மூலம் இயக்குனர் விஜய் சந்தர் ஓரளவுக்கு கவனிக்கப்பட வேண்டிய திறமைசாலி தான் போலிருக்கிறது என்கிற எண்ணத்தை உருவாக்குகிறது.. எளிமையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை சுவாரசியமாகச் சொல்லி தப்பித்து விடலாம் என்று எண்ணியிருக்கிறார். திரைக்கதையையும் கூட ஓரளவு குழப்பமில்லாமல் தான் நகர்த்துகிறார். ( விக்ரமின் நண்பர்களைக் கொன்றது யாரென தெரிந்த பிறகு அடப்பாவமே… தேவையில்லாமல் வேறொருவனைக் கொன்னுட்டாப்லயே என்கிற ஒரு நெருடல்தான்.)
அதெல்லாம் கூட விட்டு விடலாம். ஆனால், கதைகேற்ற ஹீரோவைத் தேர்வு செய்யாததால் சறுக்கியிருக்கிறார்.
வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள் யாரையாவது இந்த கதையில் பொறுத்தியிருந்தால் நிச்சயம் ஹிட்டடித்திருக்கும். என்ன செய்வது, பெரிய நடிகர்களுக்காக சில பல கதைகள் சிதைக்கப்படுவது வழக்கம் தானே!.
ஆனால், அந்த இறுதிக் காட்சி அட்வைஸ் எதற்கு பிரதர்?
அந்த காலத்து பலான பத்திரிக்கைகளில் பலான கதைகள் படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம்.
கதை முழுக்க ’எசகு பிசகான மேட்டரை’ செம விலா வரியாக எழுதி விட்டு கட்டக் கடைசியில் சொல்வார்கள் பாருங்கள் ஒரு அட்வைஸ்.!
”….ஆகவே.. இம்மாதிரி முறையற்ற உறவுகளில் ஈடுபடாதீர்கள்” என்று
அதே போலத்தான் இந்த படத்திலும். வட சென்னைச் சிறுவர்களை கொடூரமான கொலைகாரர்களாகச் சித்தரித்து விட்டு, தயவு செய்து இம்மாதிரிப் பையன்களை உருவாக்காதீர்கள் என்று அறிவுரை சொல்கிறார்கள்.
தயவு செய்து இம்மாதிரி படங்களை எடுக்காதீர்கள்.!
அதீதன்