கொழும்பு
இலங்கையில் மகளிருக்கு மதுவகைகள் விற்க விதித்திருந்த தடையை இலங்கை அரசு நீக்கி உள்ளது.
கடந்த 1979ஆம் வருடம் இலங்கை அரசு மகளிருக்கு மது வகைகள் விற்க தடை செய்தது. அத்துடன் பெண்கள் மது உற்பத்தி செய்யும் இடங்களிலோ, மது விற்பனைக் கூடங்களிலோ பணி புரியவும் தடை விதித்திருந்தது.
இது குறித்து இன்று இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீரா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 38 வருடங்களாக பெண்களுக்கு மது பானங்கள் விற்க விதித்திருந்த தடை நீக்கப்படுகிறது. அத்துடன் இனி பெண்கள் மது உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளிலும், மது விற்பனைக் கூடங்களிலும் பணி புரிய அனுமதி வழங்கப்படுகிறது. பாலின வேறுபாடு கூடாது என்பதாலும் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்காகவும் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. “ எனக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மதுக்கடைகள் மேலும் ஒரு மணி நேரம் கூடுதலாக இயங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தடை உத்தரவு இருந்த நேரத்திலும் இலங்கையில் பல இடங்களில் மது விற்பனைக்கு பெண்கள் பணி அமர்த்தப்பட்டிருந்ததும், பல கிளப்புகளில் பெண்களுக்கு மது வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.