டில்லி

ச்ச நீதிமன்றம் ஆதார் இல்லாத மக்கள் அரசைப் பொறுத்தவரை இந்தியாவில் வசிக்காதவர்களா என அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் ஆதரவற்றோர் இரவில் தங்குவதற்காக சில தங்குமிடங்களை அரசு அமைத்துள்ளது.     அங்கு தங்குவதற்கு சில அடையாள அட்டைகள் தேவை என விதிமுறை உள்ளது.   அதனால் அங்கு தங்குபவர்கள் ஆதார் அட்டையை காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.   ஆதார் இல்லாதவர்கள் தங்க இடம் இன்றி தவிப்பில் உள்ளனர்.    இது போல பல மாநிலங்களில் ஆதார் அட்டை இல்லாதவர்கள்  பல துயரங்களை எதிர் கொள்கின்றனர்.

இதையொட்டி ஒரு பொதுநல வழக்கு மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.   அந்த மனு நீதிபதி மதன் லோகுர் கீழ் உள்ள அமர்வில் விசாரிக்கப்பட்டது.   வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான தலைமைச் செயலர் துஷார் மேத்தாவிடம் நீதிபதி, “ஆதார் அட்டை இல்லதவர்கள் அரசைப் பொறுத்தவரை இந்தியாவில் வசிப்பவர்களே இல்லையா?” எனக் கேட்டார்.

அதற்கு துஷார்  தான் ஆதார் பற்றி ஏதும் சொல்வதற்கில்லை எனவும் இது பல மாநில அரசில் உள்ள விதிமுறை என தெரிவித்தார்.    அதையொட்டி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மத்திய அரசு ஆதார் அட்டை 90 கோடி மக்களுக்கு வழங்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதை சுட்டிக் கட்டினர்.

அதற்கு நீதிபதி, “தங்குவதற்கு இடமே இல்லாதவர்கள் எந்த முகவரியைக் காட்டி ஆதார் பெற முடியும்?   இந்த குளிர் காலத்தில் யாராவது வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டால் அவர்கள் ஆதார் கார்டை எப்படி தர இயலும்?   இந்த நீதிமன்றம் மாநிலங்கள் இது போல ஆதார் தேவை என வற்புறுத்துவதில் தனது அதிருப்தியை தெரிவிக்கிறது.

மத்திய அரசு மற்ற மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து ஆதார் இல்லாதவர்கள் அடையாளத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விரைவில் முடிவு செய்ய வேண்டும்”  என கூறி உள்ளார்.