சென்னை:
வைகோவை ஸ்டாலின் புறக்கணிப்பதாக அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு எடுத்தள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும்” என்றும் பேசினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சந்தித்தார். இதற்கிடையே மு.க.ஸ்டாலின் ஆழ்வார் பேட்டை வீட்டில் இருந்து கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வரை ஒரே காரில் இருவரும் சென்றனர். அப்போது இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது குறித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கு முன்பு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ம.தி.மு.க. ஆதரவு அளித்த நிலையில் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர் ஒரே மேடையில் பேசினர்.
அப்போது எதிர்பாராத விதமாக, ஸ்டாலின் வேட்டியில் டீ கறை பட்டுவிட, உடனடியாக தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வாஞ்சையுடன் துடைத்துவிட்டார் வைகோ.
ஆனால் தி.மு.க.வை ம.தி.மு.க. ஆதரிப்பதால் அதிருப்தி அடைந்த சிலர் வைகோ ஆதரவு நிலைபாட்டிலிருந்து விலகுவதாக சமூகவலைதளங்களில் எழுதினர்.
இன்னொரு பக்கம், “வைகோ நம்பத்தகுந்தவர் அல்ல” என்று சமூகவலைதளங்களல் திமுக அனுதாபிகள் பலர் பதிவிட்டனர்.
இந்த நிலையில், “தி.மு.க.வையும், ஸ்டாலினையும் உயர்த்திப்பிடிக்கும் வைகோவை, ஸ்டாலின் புறக்கணிக்கவே செய்கிறார்” என்று ஆதங்கத்துடன் குமைகிறார்கள். இவர்களில் சிலர் சமூகவலைதளங்களில் வெளிப்படையாகவும் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டி வருகிறார்கள்.
அவர்கள், “மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்றெல்லம்கூட வைகோ தெரிவித்துவிட்டார். தி.மு.க.வுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். இதை ஏற்று மனமார ஸ்டாலின் நன்றி தெரிவித்தாரா? அது மட்டுமல்ல.. ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் தனது அரசியல் நடவடிக்கைகள் குறித்த அத்தனை நிகழ்வையும் பதிவேற்றிவருகிறார். ஆனால் வைகோ சந்திப்பு குறித்து, தனது முகநூலில் அவர பதிவேற்றவே இல்லை” என்று வைகோ ஆதரவாளர்கள் சிலர் ஆதங்கத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், “கூட்டணி என்று வைகோ அறிவித்த பிறகும்கூட, அவரை திமுகவினர் பலர் கீழ்த்தரமாக விமர்சித்து சமூகவலைதளங்களில் பதிவிடுகிறார்கள். இதை திமுக தலைமையோ அல்லது வேறு உயர் பொறுப்பாளர்களோ கண்டிக்கவே இல்லை” என்றும் ஆதங்கப்படுகிறார்கள்.
அவர்களில் ஒருவர், “இரண்டு நாட்களுக்கு முன்பு கலைஞரின் உடல் நலம் விசாரித்தார்.
ஸ்டாலினுடன் ஒரே காரில் பயணித்தார்.
திமுகவுடன் கூட்டணி தொடரும்……
இந்த செய்திகள் எதுவும் ஸ்டாலினின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் இல்லை.
# இது_தான்_அவர்கள்” என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.
வெளிப்படையாக தங்கள் ஆதங்கங்களை கூறுபவர்கள் தவிர, வைகோவின் தி.மு.க. ஆதரவு நடவடிக்கையால் அக்கட்சியினர் மேலும் பலர் ஆதங்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரம், ம.தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவருடன் பேசியபோது, “இந்த நிலையில் நான் வெளிப்படையாக பேசுவது முறையல்ல. ஆனால் உறுதியாக ஒன்று சொல்ல முடியும். தலைவர் (வைகோ) ஒரு முடிவு எடுக்கிறார் என்றால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். கட்சி நலன், தமிழக நலன் ஆகியவற்றை முன்னிட்டே அவர் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளும் இருக்கின்றன.
அதே போலத்தான் தி.மு.க. ஆதரவு நிலைபாடும். இது பிடிக்கவில்லை என்று களத்தில் நிற்கும் கட்சித் தொண்டர்கள் எவரும் சொல்லவில்லை. ஏற்கெனவே கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்ட சிலர் இப்படி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதற்கு கட்சி பொறுப்பாக முடியாது.
இன்னும் சிலர்.. சமூகவலைதளங்களில் மட்டும் செயல்பட்டு வந்தவர்கள், தலைவரின் (வைகோ) தி.மு.க. ஆதரவு நிலைபாட்டை விமர்சித்து வெளியேறிவிட்டதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அவர்களது செயல்பாடு என்பது சமூகவலைதளங்களில் மட்டுமே. களத்தில் அல்ல. ஆகவே அந்த சிலரின் பேச்சுக்களையும் பொருட்படுத்த வேண்டியதில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “தலைவர் உத்தரவுப்படி செயல்படுவதுதான் தொண்டர்க்கு அழகு. அப்படி இல்லாதவர்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை” என்றார்.
அதோடு,”எங்கள் தலைவரை, தி.மு.க. அபிமானிகள் சிலர் சமூகவலைதளங்களில் விமர்சிப்பதை பார்க்க முடிகிறது. அப்படி எழுதுபவர்கள் அக்கட்சியில் எந்தவித பொறுப்புகளிலும் இல்லாதவர்கள். அதைப்பற்றியெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அதே நேரம், அது போன்றவர்களை உறுப்பினர்கள் என்கிற முறையில் அக்கட்சித் தலைமை கண்டிப்பதே நாகரீகம்” என்றார்.