டில்லி

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்து மத கடவுள் வாழ்த்து மட்டும் பாடப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளி கேந்திரிய வித்யாலயா ஆகும்.   நாடெங்கும்  1125 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றது.   இந்த பள்ளிகளில் காலையில் கடவுள் வாழ்த்து இசைக்கப்படுகிறது.    அப்போது இந்து மத கடவுள் வாழ்த்துப் பாடல்கள் மட்டுமே இசைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது குரித்து விநாயக் ஷா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.  அவருடைய குழந்தைகளும் கேந்திரிய வித்யாலயாவில்கல்வி கற்று வருகின்றனர்.   அவர் தனது மனுவில், “அனைத்து மதமும் சமம் என கூறப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்து மத கடவுள் வாழ்த்துப் பாடல்கள் மட்டுமே இசைக்கப் படுகிறது.   அத்துடன் அனைத்து மாணவர்களும் காலையில் கடவுள் வாழ்த்து நிகழ்வில் கலந்துக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தப் பட்டுள்ளது.  அத்துடன்  அனைத்து மதத்தினரும் கண்களை மூடி கை கூப்பி இந்த பாடலை இசைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இதன் மூலம் கடவுள் நம்பிக்கை அதுவும் இந்து மதக் கடவுள் நம்பிக்கையை பள்ளி முன்னிறுத்துகிறது.    சிறுபான்மை இனத்தவரும்,  கடவுள் நம்பிக்கை இல்லாதோரும் தங்கள் குழந்தைகள்  இந்த நிகழ்வில் கலந்துக் கொள்வதை ஒப்புக் கொள்வதில்லை.   கடவுள் வாழ்த்து என்பதை நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் ஆகியோருக்கும் விருப்பமில்லாத ஒன்று.    அதனால் இதை தடை செய்ய வேண்டும்”  என தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ரோகிண்டன் நாரிமன் மற்றும் நவின் ஷா ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்துள்ளது.   அந்த அமர்வு,  “இந்து மத கடவுள் வாழ்த்து ஏன் இசைக்கப் படுகிறது?  அனைத்துத் தரப்பினரும் ஒப்புக் கொள்ளும் ஒரு கடவுள் வாழ்த்தை இசைக்க ஏன் அரசு வலியுறுத்தவில்லை?  மேலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கடவுள் வாழ்த்து இசைக்க அனுமதிப்பது அவசியமா?”  என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.   இன்னும் 4 வாரங்களுக்குள் இதற்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.