மிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை இன்னும் ஓரிரு நாளில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது.

விவசாயத்தையும், விவசாயிகளையும் வாழ வைக்கும் இயற்கையை போற்றும் வகையில் பொங்கல் பண்டிகை தமிழர்களால் பாரம்பரியமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த ஆண்டு தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சென்னை வாழ்தமிழர்கள் கொண்டாடுவார்களா  என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும்  கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக  நடைபெற்று வரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக பேருந்து போக்குவரத்து பெரும்பாலும் முடங்கிவிட்டது.

தங்களது பணிக்காலத் தொகையை அரசு அளிக்கவேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை முன்வைத்து போராடும் போக்குவரத்து ஊழியர்கள், தீர்வு கிடைக்கும் வரை போராடுவது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

அரசு சார்பில், இனி பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இதனால் அரசுப் பேருந்து போக்குவரத்து ஆகப்பெரும்பாலும் முடங்கிவிட்டது.

தமிழக அரசு அறிவித்த 12ஆயிரம்  பொங்கல் சிறப்பு பேருந்து களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட இருந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் ஏற்பட்டது. இதை யடுத்து முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தவிர ஏற்கெனவே முன் பதிவு செய்தவர்களும்கூட,  ஊருக்குச் செல்ல முடியுமா என்ற சந்தேகத்தில் இருக்கிறார்கள்.

இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சென்னை வாழ் தமிழ் மக்கள்தான். காரணம் சென்னையில் வசிப்பவர்களில் கணிச மானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம்.

இவர்கள் பணி நிமித்தம் சென்னையில் தங்கியிருந்தாலும், பொங்கல் விழாவை சொந்த ஊரில் கொண்டாட விரும்புவார்கள். சென்னையிலேயே செட்டிலாகிவிட்ட வெளியூர்வாசிகள்கூட, பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் உற்றார் உறவினருடன் கொண்டாடுவார்கள்.

தவிர பல்பொருள் அங்காடிகள், துணிக்கடைகள் உட்பட கடை களில் பணி புரியும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களும், யுவதிகளும் வருடத்துக்கு ஒருமுறை பொங்கல் பண்டிகையை ஒட்டித்தான் விடுப்பு எடுத்து சொந்த ஊருக்குச் செல்வார்கள்.

அப்படிச் செல்லும்போது, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும், தென்னிந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கியும்கூட கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் இருமடங்கு வசூலிக்கப்பட்டும் அதிலும் கூட்டம் நிரம்பி வழியும்.

ஆனாம் இம்முறையோ போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை.  சாதாரண அரசுப் பேருந்துகளே இயங்காத நிலையில் சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் ஆம்னி பஸ்கள் மிக அதிகமாக கட்டணம் வசூலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சிக்கு செல்ல ரூ.1000 கட்டணமாக வசூலிக்கிறார்கள். மேலும், மதுரைக்கு 1250 ரூபாய் கட்டணமும், நெல்லை, கோவைக்கு ரூ.2000 கட்டணம் என்று நிர்ணயித்து கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே தென்மாவட்டத்தைச் சேர்ந்த சென்னைவாழ் தமிழர்கள், இந்த பொங்கலை கொண்டாட முடியாத சூழலில் இருக்கிறார்கள்.

சென்னையில் பணி புரியும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் அருள், “வருடத்துக்கு ஒரு முறை பொங்கல் பண்டிகையின்போதுதான் ஊருக்குப் போவோம். பத்து நாள் விடுமுறை கிடைக்கும். ஆனால் இப்போது பேருந்து இல்லை. அப்படியே தனியார் பேருந்தில் இடம் கிடைத்தாலும் இரண்டு, மூன்று பங்கு கட்டணம் கேட்கிறார்கள்.

சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடினால்தான் பொங்கல் சுவைக்கும். ஆனால் இந்த மூறை ஊருக்குச் செல்ல முடியாது. எங்களுக்கு துக்க பொங்கல்தான்!” என்றார் வருத்தமாக.

இதே போன்ற மனநிலையில்தான் சென்னை வாழ், வெளியூர்வாசிகள் அனைவரும் இருக்கிறார்கள்.