சென்னை,
புதுச்சேரியில் தொண்டு நிறுவன பணிகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்க பெண் தொழிலதிபர், விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அமெரிக்காவுக்கே அனுப்பி வைக்கப்பட்டார்.
அமெரிக்காவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் காசா எலிசபெத் வண்டே. இவர் தொழிற்முறை விசா காரணமாக அடிக்கடி இந்தியா வருவார். இங்கு புதுச்சேரியில் தங்கி சிற்றுண்டி கடை மற்றும் ரெடிமேட் கடையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் தொண்டு நிறுவன பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
சுமார் 10 ஆண்டுகளாக இவர் வர்த்தக விசா மூலம் வந்து செல்வது, தொழில் நடத்தி வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 5–ந் தேதி, அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, விமான நிலையத்திலேயே சிறை வைத்தனர். அதற்கு அவர் காரணம் கேட்டபோது, அவரது பெயர் கருப்பு பட்டியலில் இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
வீதி மீறி விசா பெற்று அவர் வந்து சென்றதால், அவரது பெயரை கருப்பு பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைடுத்து, அவர் சார்பாக வழக்கறிஞர் மிஸ்ரா என்பவர் டில்லி ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். அதில், காசா எலிசபெத் வண்டேவை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப தடை விதிக்குமாறு கோரியிருந்தார்.
ஆனால், அதற்குள் விமான நிலைய அதிகாரிகள் காசாவை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். இதன் காரணாக நேற்று விசாரணைக்கு வந்த அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், காசாவை ஏற்கனவே அமெரிக்கா வுக்கு திருப்பி அனுப்பிவிட்டதால், அதற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்று நீதிபதிகள் கூறினர்.