பெங்களூரு
கர்னாடகா முதல்வர் சித்தராமையா தன்னை விமர்சித்த உத்திரப் பிரதேச முதல்வருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் கர்னாடகா மாநிலத்தில் நடந்த ஒரு பேரணியில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது யோகி, “பாஜக கர்னாடகாவில் ஆட்சி செய்த போது பசுவதை தடுப்பு சட்டம் இயற்றினோம். ஆனால் அடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அந்த சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது. இந்துக்களுக்கு பசு ஒரு புனிதமான மிருகம். முதல்வர் சித்தராமையா உண்மையான இந்துவாக இருந்தால் அவர் உணவுக்காக பசுக்களை கொல்வதை எதிர்த்திருப்பார்” என கூறி இருந்தார்.
அவரின் இந்த பேச்சுக்கு சித்தராமையா பதில் அளித்துள்ளார். அவர், “இந்துக்களில் பலர் மாட்டுக்கறி சாப்பிடுகின்றனர். நான் விரும்பினால் நானும் சாப்பிடுவேன். என்னை மாட்டுக்கறி சாப்பிடாதே என சொல்ல யோகி ஆதித்யநாத் யார்? எனக்கு மாட்டுக்கறியின் சுவை பிடிக்காது. அதனால் நான் சாப்பிடுவதில்லை. எங்களுக்கு உபதேசம் செய்யும் முன்பு சுவாமி விவேகானந்தர் மாட்டுக்கறி பற்றி கூறியவைகளை யோகி படித்துப் பார்க்கட்டும்.” எனக் கூறி உள்ளார்.
மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில், “எனக்கு பசுக்களின் பாதுகாப்பு பற்றி உபதேசம் செய்யும் யோகி ஆதித்யநாத் என்றாவது மாடுகளை மேய்த்துள்ளாரா? நான் பசுக்களை வளர்த்துள்ளேன். மாடு மேய்த்துள்ளேன். சாணி அள்ளி இருக்கிறேன். என்னைப் பற்றி விமர்சனம் செய்ய யோகிக்கு தகுதி இல்லை” என பதிந்துள்ளார்.