மனாமா:

“இந்தியாவில் அசாதாரண சூழல் நிலவுகிறது; இந்த நிலையைப் போக்க போராடும் சக்திகளுடன் இணையுங்கள்” என்று பஹ்ரைன் வாழ் இந்தியர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்  வெளிநாட்டு பயணமாக பஹ்ரைன் சென்றுள்ளார் ராகுல் காந்தி. அந்நாட்டு அரசு விருந்தினராக சென்றுள்ள ராகுல் காந்தி அந்நாட்டு பட்டத்து இளவரசரை சந்தித்து உரையாடினார்.

பிறகு பஹ்ரைன் வாழ் இந்தியர்கள் மாநாட்டில் அவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “உங்களது நாட்டில் (இந்தியா) மிகவும் தீவிரமான பல பிரச்சனைகள் உள்ளன  என்பதை உங்களிடம் சொல்ல வந்திருக்கிறேன்.  அதேநேரத்தில் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வில் நீங்களும் பங்கு வகிக்கிறீர்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த மூன்று வருடங்களில் இந்தியாவில் முதல் முறையாக வேலைவாய்ப்பு என்பது மிகவும் குறைவானதாக நிலையில் இருக்கிறது., வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், உலகத் தரம் வாய்ந்த கல்வியை அளிப்பது போன்ற முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் வெறுப்பு அரசியலையும் பிரிவினையையும் அதிகரிப்பதிலும் ஆளும்தரப்பினர் கவனம் செலுத்துகிறார்கள்.

வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு போராடுகிறோம்; சாதி மத பேதங்கள் இல்லாமல்  அனைத்து மக்களை ஒருங்கிணைப்பதில் சவால்கள் இருக்கின்றன.. அதில் வெல்வோம் என்று கூற  வேண்டிய அரசு,   வேலைவாய்ப்புகளை இழப்போமா என்கிற அச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. சமூகங்களிடையேயான வெறுப்பு அரசியலை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

இந்திய இளம் தலைமுறையினர் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் அச்சத்துடன் வாழ்கின்றனர். மத்திய  அரசின் நடவடிக்கைகள் மீது மக்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.

இந்தியாவில் செய்தியாளர்கள்  சுட்டுக் கொல்லப்படுகின்றனர். தலித் மக்கள் தாக்கப்படுகின்றனர். சிறுபான்மையினர் அடித்தே கொல்லப்படுகின்றனர். முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மர்மமான முறையில் மரணமடைந்து வருகிறார்கள்.

இந்தியாவில் ஒரு அசாதாரண நிலையே நிலவுகிறது.

இந்த நிலைமைக்கு எதிராக போராடுகிற சக்திகளுக்கு உங்களது ஆதரவை அளியுங்கள் என்று  கேட்டுக் கொள்கிறேன். உங்களது திறமை, பொறுமை, தேசப்பற்று ஆகியவைதான் இன்று இந்தியாவுக்கு தேவை. இந்தியாவை மறுசீரமைக்க எங்களுக்கு நீங்கள் உதவுங்கள்” என்று ராகுல் காந்தி பேசினார்.