கண்ணூர்:
ஆர்.எஸ்.எஸ். விழாவில் சி.பி.எம். உள்ளூர் தலைவர் கலந்துகொண்டது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். – சி.பி.எம். இடையே தொடர்ந்து மோதல்கள் நடந்துவருகின்றன. தங்களது தொண்டர்கள் கொல்லப்படுவதாக பரஸ்பரம் இரு அமைப்புகளும் குற்றம் சாட்டுவது வழக்கம்.
குறிப்பாக கண்ணூர் பகுதியில் இரு இயக்கங்களிடையே மோதல்கள் அதிகம் நடைபெற்றுள்ளது. சி.பி.எம். தொண்டர்கள் பலரது கொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தொடர்புபடுத்தி அக்கட்சி தலைவர்கள் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஆர். எஸ்.எஸ். அமைப்பின் சேவை அமைப்பான சேவா பாரதியின் அலுவலக திறப்பு விழா பானூர் பகுதியில் யு.பி.எஸ் பள்ளியில் நடைபெற்றது. இதில் பானூர் பகுதி சி.பி.எம். செயலாளர் கே. கே. பிரேமன் கலந்து கொண்டார்.
இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. “சி.பி.எம். தொண்டர்கள் பலர் அப்பகுதியில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த நிகழ்வுகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது. இந்த நிலையில் சி. பி. எம். பிரமுகர் ஆர்.எஸ்.எஸ். நிகழ்வில் ஏன் கலந்துகொண்டார்” என்று கேரளா முழுவதுமுள்ள சி.பி.எம். கட்சி தொண்டர்களும், ஆதரவாளர்களும் கேள்வி எழுப்புகிறார்கள்.
அதே நேரம், உள்ளூர் சி.பி.எம். தொண்டர்கள் தெரிவிப்பதாவது:
“இந்த பகுதியில் ஆர்.எஸ். எஸ். – சி.பி.எம். உறுப்பினர்களிடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதனால் கலவர சூழல் தொடர்கிறது. இந்த நிலையை மாற்றி சுமுகமான சூழலை ஏற்படுத்த இரு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் பானூர் வட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் கூட்டங்களை நடத்தி விவாதித்து வருகிறார்கள். இது இங்குள்ள கலவர சூழலை தணிக்க உதவுகிறது.
இதன் ஒரு பகுதியாகத்தான் ஆர்.எஸ்.எஸ். நிகழ்வில் உள்ளூர் சி.பி.எம். தலைவர் கலந்துகொண்டார்.
இங்குள்ள சூழலை கணக்கில் கொண்டே இதை நோக்க வேண்டும்” என்கிறார்கள்.