கோவை,
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இது வழக்கமான கூட்டம்தான், தமிழகத்தில் ஜெ. அறிவித்த அனைத்து திட்டங்களும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும், மத்திய அரசு அமல்படுத்தி உள்ள அம்ரூத், ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்களில் பல முரண்பாடுகள் உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 8தேதி கூட உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் கோவை வந்த தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, , “தமிழகத்தில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயப் பிரச்னை, குடிநீர் பிரச்னை, புயல் என அனைத்து பிரச்சினைகளையும் இந்த அரசு சிறப்பாகக் கையாண்டு வருகிறது என்று கூறினார்.
மேலும் நேற்று நடைபெற்ற கூட்டம், வழக்கமான கூட்டம்தான் என்ற அமைச்சர், சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டதாக கூறினார்.
மேலும், ரஜினி கட்சி குறித்த கேள்விக்கு, ரஜினியின் கட்சி அறிவிப்பை வரவேற்பதாகவும், அவர் கட்சிக் கொள்ளைகளை அறிவித்த பின்னர் அதுகுறித்து பார்க்கலாம் என்று கூறினார்.
மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் போன்ற சில திட்டங்களில் முரண்பாடுகள் இருக்கின்றன. இந்த முரண்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது என்றவர், அம்ரூத் திட்டத்தினை செயல்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.