சண்டிகர்
ஆதார் விவரங்களை தெரிந்துக் கொள்ள ரூ. 500 விலையில் மென்பொருள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த நவமர் மாதம் ஆதார் நிறுவனம் “ஆதார் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. இந்த விவரங்களை யாராலும் தெரிந்துக் கொள்ள முடியாது இவைகள் திருடப் படுவதற்கான வாய்ப்பே இல்லை” என தெரிவித்திருந்தது. இது குறித்து “தி டிரிப்யூன்” என்னும் செய்தி நிறுவனம் ஆய்வு நடத்தி உள்ளது. அப்போது ஆதார் விவரங்களை அறிந்துக் கொள்வது மிகவும் சுலபம் என தெரிய வந்துள்ளது.
இந்த செய்தி நிறுவனம் ஒரு குழுவை அமைத்து இதனைப் பரிசீலித்த போது, ஒரு பெயர் தெரியாத நிறுவனம் ரூ..500 க்கு ஒரு மென்பொருளை இதற்காக விற்று வருவது தெரிந்துள்ளது. அந்த நிறுவனத்தை குழுவினர் தொடர்பு கொண்டு ரூ. 500ஐ பே டி எம் ஆப் மூலம் செலுத்தி உள்ளனர். பத்து நிமிடங்களில் அந்த நிறுவனப் பிரதிநிதி இந்தக் குழுவுக்கு ஒரு லாகின் ஐடி மற்றும் பாஸ்வர்ட் அனுப்பி உள்ளார்.
அதைக் கொண்டு உள்ளே நுழைந்து ஆதார் அட்டையின் எண்ணை குறிப்பிட்டால் அதில் பதியப் பட்ட அனைத்து விவரங்களையும் அறிய முடிகிறது. ஆதாரில் உள்ள பெயர், விலாசம், பின்கோட் எண், புகைப்படம், தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் முகவரி உட்பட அனைத்தும் அறிய முடிகிறது. அது மட்டும் இன்றி மேலும் ரூ.300 செலுத்தினால் ஆதார் எண்ணை தெரிவித்தால் அந்த ஆதார் அட்டையை அச்சடிக்கும் வசதி கொண்ட மென்பொருளையும் இந்த நிறுவனம் செய்திக் குழுவுக்கு அளித்துள்ளது.
இது குறித்து அந்த செய்தி நிறுவனக் குழு அளித்துள்ள விவரம் வருமாறு :
பகல் 12.30 மணி : நமது செய்தியாளர் அனாமிகா என்னும் புனைப்பெயரில் 7610063464 என்னும் வாட்ஸ் அப் நம்பரை தொட்ர்பு கொண்டு அனில்குமார் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். அவர் அந்த மென்பொருளை நிறுவ ஒப்புக் கொண்டுள்ளார்.
பகல் 12.32 மணி: பெயர், ஈ மெயில் ஐடி மற்றும் மொபை நம்பரை வாங்கிக் கொண்ட குமார் 7610063464 என்னும் எண்ணுக்கு பே டி எம் மூலம் ரூ. 500 அனுப்பச் சொன்னார்.
பகல் 12.35 மணி : அனாமிகாவுக்கு ஆதார்ஜலந்தர்@ஜிமெயில்.காம் என்னும் ஈமெயில் ஐடி உருவாக்கி அது குறித்த விவரங்களை அவர் மொபைலுக்கு குமார் அனுப்பினார்.
பகல் 12.48 மணி : ரூ. 500 அனுப்பி வைக்கப்பட்டது
பகல் 12.49 மணி : அனாமிகாவுக்கு “நீங்கள் ஆதார் நிறுவனத்தில் ஒரு ஏஜண்டாக சேர்க்கப்பட்டுள்ளீர்கள்.. உங்கள் ஐடி அனாமிக_6677 ஆகும். அதன் மூலம் நீங்கள் இனி ஆதார் விவரங்களை அறிந்துக் கொள்ளலாம். விரைவில் உங்கள் பாஸ்வர்ட் அனுப்பப் படும்” என ஒரு ஈ மெயில் வந்தது. அதே போல அடுத்த சில நொடிகளில் பாஸ்வர்ட் வந்தது.
பகல் 12.50 மணி : அனாமிகாவால் ஆதார் விவரங்களை அறிய முடிந்தது.
சில நிமிடங்கள் கழித்து அனில் குமாரை தொடர்பு கொண்டு ஆதார் அட்டைகளை பிரிண்ட் செய்ய முடியுமா என அனாமிகா கேட்டுள்ளார். அதற்கு அவர் 8107888008 என்னும் எண்ணுக்கு பே டி எம் மூலம் ரூ. 300 அனுப்பச் சொல்லி உள்ளார். ராஜ் என்னும் பெயரில் இருந்த அந்த எண்ணுக்கு ரூ.300 அனுப்பியதும், சுனில்குமார் என்னும் நம்பர் 7976243548 என்னும் எண்ணில் இருந்து அனாமிகாவை தொடர்பு கொண்டு “டீம் வியூவர்” மூலம் ஆதார் அட்டை அச்சடிக்கும் மென்பொருளை நிறுவி உள்ளார். மென்பொருளை நிறுவியபின் அந்த மென்பொருளின் டிரைவ் முதற்கொண்டு அனைத்தையும் சுனில் அங்கிருந்தே நீக்கி விட்டார். அதன் பின் அனாமிகாவால் சுலபமாக ஆதார் அட்டைகளை பிரிண்ட் செய்யவும் முடிந்தது.
ஆதார் நிறுவனத்தின் சண்டிகர் கிளைக்கு இந்த விவரங்கள் அனுப்பப் பட்டுள்ளது. விவரங்களைக் கேட்டு சண்டிகர் கிளையின் கூடுதல் நிர்வாக இயக்குனர் அதிர்ந்து போய் உள்ளார். உடனடியாக இந்த விவரங்கள் பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப குழுவினருக்கு அனுப்பப் பட்டுள்ளது. மேலும் இது போல சட்ட விரோதமாக இந்த மென்பொருளை விற்போர் கண்டு பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.