டில்லி,
ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதியான டி.எஸ்.தாக்கூருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க ஆம்ஆத்மி கட்சி விரும்பியது. ஆனால், தாக்கூர் அதை ஏற்க மறுத்துவிட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவலை ஆம்ஆத்மி கட்சியின் மூத்த நிர்வாகி தெரிவித்து உள்ளார்.
ஆம்ஆத்மி ஆட்சி செய்துவரும் டில்லியில் இருந்து மூன்று ராஜ்ய சபா தொகுதி உறுப்பினர்களின் பதவி காலம் ஜனவரி இரண்டாம் வாரத்தில்முடிவடைகிறது. இங்கிருந்து தேர்வாகி இருந்த காங்கிரஸின் ஜனார்த்தன் திவிவேதி, பர்வேஸ் ஹஷ்மி மற்றும் கரண் சிங் ஆகியோர் இந்த மாதம் ஓய்வு பெறுகின்றனர்.
அந்த இடங்களை கைப்பற்ற பாஜ, காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்பட அரசியல் கட்சியினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
70 உறுப்பினர்கள் கொண்ட டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக ராஜ்யசபா உறுப்பினர் பதவி ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த ஒருவருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக, முன்னாள் தலைமைநீதிபதி டி.எஸ்.தாக்கூரை அந்த பதவிக்கு போட்டியிட ஆம்ஆத்மி கட்சி விரும்பி, கட்சியின் நிர்வாகிகள் நீதிபதியை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
அவர்களிடம், நீதிபதி தாக்கூர், ராஜ்சபா உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டதாக ஆத்ஆத்மி தெரிவித்து உள்ளது.
டில்லியில் ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கிக்கொண்டிருந்தாலும், 3 தொகுதிகளிலும் போட்டியிடும் எதிர்கால வேட்பாளர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முன்னாள் ஆர்.பி.ஐ. கவர்னர் ராஜன், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஷோரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஏற்கனவே கட்சியை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் தலைமைநீதிபதி டி.எஸ்.தாக்கூர், ஆம்ஆத்மி கட்சிக்கு எதிரான ஒரு வழக்கில், ராஜ்ய சபாநாயகர் அளித்த தீர்ப்பை தாக்கூர் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.