ஆட்சிக்கு வரும் கட்சிகள் அனைத்தும் மக்களை கொள்ளையடிக்கின்றன என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் ரஜினி.
இரண்டாவது கட்டமாக நடிகர் ரஜினி, தனது ரசிகர்களை சந்தித்திக்கும் ரஜினி, தனிக்கட்சி துவங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.
மேலும், அனைத்து அரசியல் கட்சிகளையும் “கொள்ளையர்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
“சாதி மத வேறுபாடு இல்லாத ஆன்மிக அரசியல் கொண்டுவருவேன்” என்று ரஜினி பேசினார்.
(இது குறித்து தனியாக செய்தி வெளியிட்டுள்ளோம்.)
மேலும் ரஜினி பேசும்போது, “அந்தக் காலத்தில் மன்னர்கள் அடுத்த நாட்டின் மீது போரிடுவார்கள். அந்தநாட்டு அரண்மனையை கொள்ளையடிப்பார்கள். மக்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பார்கள். மன்னர் மட்டுமின்றி தளபதிகள், வீரர்கள் உட்பட அனைவரும் கொள்ளையடிப்பார்கள்.
அதாவது அடுத்த நாட்டை வீழ்த்தி கொள்ளையடிப்பார்கள். ஆனால் இங்கோ ஜனநாயகம் என்ற பெயரில் சொந்த நாட்டு மக்களையே கொள்ளையடிக்கிறார்கள்.
இங்கே சிஸ்டம் சரியில்லை. இதை மாற்ற வேண்டும்” என்று ரஜினி பேசினார்.
ரஜினி, பா.ஜ.கவில் இணைவார் அல்லது தனிக்கட்சி துவங்கி பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வார் என்ற யூகம் நீண்டநாட்களாக இருக்கிறது. இந்த நிலையில், “ஆளும் கட்சியினர் அனைவரும் கொள்ளையர்கள்” என்று ரஜினி விமர்சித்துள்ளார். மேலும், 234 தொகுதிகளிலும் தனித்த போட்டி என்று தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.