சென்னை,
கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், பெரியபாண்டியனை சுட்டது, அவரது குழுவில் இருந்த கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேர் என்பது தெரிய வந்தது. கொள்ளையர்களுடன் நடந்த போராட்டத்தின்போது தவறுதலாக குண்டு பெரிய பாண்டியன்மீது பாய்ந்துவிட்டது என்று பெரியபாண்டியன் மனைவி மற்றும் தந்தையிடம் முனிசேகர் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
கொளத்தூரில், நகைக் கடையில் பட்டப்பகலில் கொள்ளையடித்து ராஜஸ்தான் தப்பிச் சென்ற கொள்ளை யர்களைப் பிடிக்க ஆய்வாளர் பெரியபாண்டியன் தலைமையிலான தனிப்படை ராஜஸ்தானில் முகாமிட்டிருந்தது.
கொள்ளையர்கள் பதுங்கி உள்ள பகுதி குறித்த தகவல்கள் கிடைத்தும், கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது, கொள்ளையர்கள் பெரியபாண்டியனை சுட்டதாக கூறப்பட்டது. பின்னர் ராஜஸ்தான் போலீசார் விசாரணையில்,பெரிய பாண்டியனை சுட்டது முனிசேகர் என்று தெரியவந்தது.
இதுகுறித்து தமிழக போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர். அதில், பெரியபாண்டியனுடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் கொள்ளையர்களை சுட்டபோது, அந்த குண்டு குறி தவறி பெரியபாண்டியன் மீது பட்டு அவர் உயிரிழந்தது தெரிய வநதுள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்த பெரியபாண்டியன் மனைவி, முனிசேகர் தனது கணவரின் நண்பர் என்றும், அவர் சுட வாய்ப்பில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், பெரியபாண்டியனின் 16வது நாள் காரியத்திற்கு நெல்லை சென்றிருந்த முனிசேகர் பெரிய பாண்டியன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம், ராஜஸ்தானில் நடந்த சம்பவங்களை விளக்கி கூறி பானுரேகா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டு அழுததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதை உறுதிபடுத்துவதாக, தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பெரியபாண்டியின் மனைவி பானுரேகா, ராஜஸ்தானில் நடந்த சம்பவத்தை விளக்கி, மனசாட்சிப்படி தன்னிடம் முனிசேகர் மன்னிப்பு கேட்டதாக வும், இருவருக்கும் முன்விரோதம் எதுவும் கிடையாது.
இருவருமே நண்பர்கள்தான். தவறு நடந்து விட்டதாக கூறி அழுதார் முனிசேகர் என்றும் பானுரேகா கூறியுள்ளார்.
போலீஸ் உயர் அதிகாரிகளின் அறிவுரைப்படி, முனிசேகர் பெரியபாண்டி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.