டில்லி,
மதச்சார்பின்மையாளர்கள் குறித்து இழிவாக விமர்சித்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே பாராளுமன்றத்தில் இன்று மன்னிப்பு கோரினார்.
மத்திய அமைச்சர் ஹெக்டேவின் பேச்சால் பாராளுமன்றம் சில நாட்கள் முடங்கிய நிலையில், இன்று தனது பேச்சுக்கு பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய இணை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, மதச்சார்பின்மை யாளர்கள் தங்களது பெற்றோர் யார் என தெரியாதவர்கள் என்ம்று அத்துடன் மதச்சார்பின்மை என்பதையே அரசியல் சாசனத்தில் இருந்து மாற்றுவோம்; அதற்குதான் பாஜக ஆட்சிக்கே வந்திருக்கிறது என்றும் விமர்சித்திருந்தார்.
மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து பாராளு மன்றத்திலும் புயல் வீசியது. அனந்த குமார் ஹெக்டே, தான் பேசிய பேச்சு குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதன் காரணமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அமளி காடானது. இதன் காரணமாக அமைச்சர் ஹெக்டே மாநிலங்களவையில் இருந்து வெளியேறினார்.
இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியதும், மீண்டும் இந்த பிரச்சினை தலைதூக்கியது. அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஹெக்டே தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார்.
அவர் கூறியதாவது . ‘இந்திய அரசியலமைப்பு சட்டமும் பாராளுமன்றமுமே உயர்வானது. அதையும், பாபா சாகேப் அம்பேத்கரையும் நான் மதிக்கிறேன். இந்திய குடிமகனாக அதற்கு எதிராக நான் செயலபட மாட்டேன். எனது பேச்சால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.