சிறப்புக்கட்டுரை: அ. குமரேசன்
நமது நாட்டில் மிகவும் அடிவாங்கிய சொற்கள் பல இருக்கின்றன. உதாரணமாக ‘புரட்சி’ என்ற சொல். ‘ஜனநாயகம்’ என்ற அப்படிப்பட்டதுதான். அண்மைக்காலமாக அடிக்கடி அடிவாங்கிக்கொண்டிருக்கிற ஒரு சொல்: ‘மதச்சார்பின்மை.’ உண்மையாகவே இந்த நாடு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று விரும்பி, அதற்காகப் பாடுபடுகிறவர்களும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். நாட்டின் பெருமைக்குரிய மதச்சார்பற்ற அடையாளத்தை ஒழித்துக்கட்டி, ஒற்றை மதத்தின் தலைமைக்கு உட்பட்டதாக மாற்ற முயல்வோரும் அந்தச் சொல்லைச் சொல்லி வந்திருக்கிறார்கள்.
இப்போது, அந்த இரண்டாவது அணி சார்பாக ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லைக் குதறியிருப்பவர் மத்திய வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்புத் துறை இணையமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே. எந்த வேலைக்கான திறனை அவர் வளர்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை, தனது கர்நாடக மாநிலத்தின் குக்கனூர் நகரில் ஞாயிறன்று (டிசம்பர் 24) நடந்த பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சட்டப்பூர்வமான ஒற்றை மத ஆட்சியின் கீழுள்ள நாடு என்ற, இந்நாட்டு மக்களால் ஏற்கப்படாத சித்தாந்தத்தை நிலைநாட்டுவதற்குப் பெருந்தடையாக இருப்பது இந்தியாவின் அரசமைப்பு சாசனத்தில் உள்ள மதச்சார்பின்மை என்ற சொல். ஆகவே அரசமைப்பு சாசனத்திலிருந்தும், மக்கள் மனங்களிலிருந்தும் முடிந்தால் சொல்லகராதி யிலிருந்துமே கூட, மதச்சார்பின்மை என்ற சொல்லை அகற்றிவிட, இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் சார்ந்திருக்கிற மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறவர்கள் துடிக்கிறார்கள். அந்தத் துடிப்புதான் இணை யமைச்சரின் பேச்சில் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.
“அரசமைப்பு சாசனம் அவ்வப்போது மாற்றப்பட வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம்,” என்று அவர் பேசியிருக்கிறார். அரசமைப்பு சாசனம் ஒன்றும் கடவுளால் அருளப்பட்ட, மனிதர்கள் கைவைக்கக்கூடாத, இறுதிப்படுத்தப்பட்ட புனித நூல் அல்ல. 1947 ஆகஸ்ட் 15ல் புதிதாக உருவாகிய இந்தியா, எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையுடன் அரசமைப்பு சாசனத்தை உருவாக்கிக் கொடுத்த, அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான சபையினர் அதைத் தெளிவாகப் புரிந்துவைத்திருந்தனர். அந்தப் புரிதலோடுதான், தேவைப்படுகிறபோதெல்லாம் அதில் சட்டத் திருத்தங்கள் மூலம் உரிய மாற்றங்களைச் செய்துகொள்வதற்கு இடம் அளித்தனர். சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம் மனம் திறந்து விவாதித்து, உரிய திருத்தங்கள் செய்வதற்கான ஏற்பாடுகளுடன் அரசமைப்பு சாசனத்தை அங்கீகரித்தது.
ஆகவே, அரசமைப்பு சாசனத்தில் மாற்றங்கள் செய்வது தெய்வக்குற்றமல்ல. ஒரு புதிய சட்டம் சேர்க்கப்படுவதே சட்டச் சொற்களின்படி ஒரு சாசனத் திருத்தம்தான். அப்படித் திருத்தங்கள் செய்யப்பட்டதால்தான் பிற்காலத்தில், அதுவரை இல்லாத பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், குழந்தை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், மக்களின் வேர்மட்ட அரசாங்கமாகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டம், வன உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், தகவல் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் அரசமைப்பு சாசனப் படையில் சேர்ந்தன. (அந்தச் சட்டங்கள் அரசமைப்பு சாசனத்தை அலங்கரிக்கின்றன என்றும் சொல்லலாம். ஏனென்றால் உண்மையாகவே அவற்றில் பல சட்டங்கள் வெறும் அலங்காரமாகவே வைக்கப்பட்டிருக்கின்றன, அவற்றைச் செயல்படுத்த வைப்பதற்குப் பெரும் போராட்டங்கள் தேவைப்படுகின்றன.) நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திருத்தத்திற்கான முன்வரைவை இன்னும் முடக்கி வைத்திருக்கிறார்கள் என்கிற விவகாரமும் இருக்கிறது.
அப்படியான ஒரு திருத்தம் அல்லது புதிய சட்டம் பற்றி இணையமைச்சர் பேசியிருந்தால் வரவேற்கலாம். முடக்கி வைக்கப்பட்டிருக்கிற மகளிர் இட ஒதுக்கீடு சட்டமுன்வரைவை நிறைவேற்றுவது பற்றிப் பேசியிருந்தால் பாராட்டியிருக்கலாம். இவரோ, “அதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம்,” என்று கூறியிருக்கிறார். எதற்காக என்றால், இந்திய அரசமைப்பு சாசனத்தின் அடித்தளங்களில் ஒன்றாகிய மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத் தகர்ப்பதற்காக! மேற்கொண்டு எழுதுவதற்கு முன் அவரிடம் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது: நீங்கள் எதற்காக வந்திருப்பதாக நினைத்தாலும் சரி, மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதும், இணையமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்ததும் அதற்காக அல்ல.
பாஜக தலைவர்களுக்கு இந்தச் சொல்லின் மீது உள்ள ஆசூயை பற்றித் தெரியவருவது புதிதல்ல. 2015ல் 66வது குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இந்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ விளம்பரத்தில், அரசமைப்பு சாசனத்தின் முன்னுரைப் பத்தி படமெடுத்துச் சேர்க்கப்பட்டிருந்தது. “இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை உயர்தன்னாளுமை உள்ள ஜனநாயகக் குடியரசாக உருவாக்கவும் அதை அனைத்துக் குடிமக்களுக்காகவும் பெருமிதத்தோடு உறுதியேற்கிறோம்,” என்று அந்த வாசகம் இருக்கும்.
இது 1949ல் கொண்டுவரப்பட்ட அரசமைப்பு சாசனத்தின் முன்னுரையில் உள்ள வாசகம். ஆனால், 1976ல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, 1977ல் குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்று அங்கீகரிக்கப்பட்ட அரசமைப்பு சாசனத்தின் முன்னுரையில் “இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை உயர்தன்னாளுமை உள்ள சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக உருவாக்கவும் அதை அனைத்துக் அனைத்துக் குடிமக்களுக்காகவும் உறுதிப்படுத்தவும் பெருமிதத்தோடு உறுதியேற்கிறோம்,” என்ற வாசகம் இருக்கிறது.
குடியரசு தின அரசு விளம்பரப் படத்தில் திருத்தப்பட்ட வாசகத்தை வைக்காமல், பழைய வாசகத்தை வைத்தது பற்றி விமர்சிக்கப்பட்டபோது, “மூல சாசனத்தில் மதச்சார்பற்ற, சோசலிச என்ற சொற்கள் இல்லை, இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில்தான் சேர்க்கப்பட்டது, ஆகவேதான் பழைய வாசகம் விளம்பரப்படத்தில் வைக்கப்பட்டது” என்பதாக விளக்கமளிக்கப்பட்டது. நாடாளுமன்றம் விவாதித்து நிறைவேற்றி, குடியரசுத்தலைவர் ஒப்புதலளித்து ஏற்கப்பட்டுவிட்டால் அதுதான் நடைமுறையில் இருக்கிறது என்பது பொருள். எடுத்துக்காட்டாக, ஜிஎஸ்டி வரிக்கான சட்டம் வந்தபிறகு, அதை எதிர்த்தவர்கள் உள்பட அந்த வரியைத்தான் செலுத்த முடியுமே தவிர, பழைய முறைப்படிதான் வரி கட்டுவேன் என்று அடம் பிடிக்க முடியாது.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிற்காலத்தில்தான் வந்தது என்பதற்காக ஒருவர் தலித் மக்களையோ பழங்குடி மக்களையோ அவமானப்படுத்தித் தாக்க முடியாது. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் மூல சாசனத்தில் இல்லை என்பதற்காக பெண்களைச் சிறுமைப்படுத்த முடியாது. குழந்தை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் மூல சாசனத்தில் கிடையாது என்பதற்காகக் குழந்தைகளைக் கொடுமைப்படுத்த முடியாது…
இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அரசின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தில் திருத்தப்படாத சாசனத்தின் மூல வாசகம் இடம் பெறச் செய்யப்படுகிறது என்றால், பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட இந்தச் சட்டங்களையும் மதிக்க வேண்டியதில்லை என்று சொல்வதாகப் பொருள் கொள்ளலாமா?
அம்பேத்கர் ஏன் மூல சாசனத்தில் “மதச்சார்பற்ற” என்ற சொல்லைச் சேர்க்கவில்லை? மதச்சார்பின்மைக் கோட்பாட்டில் உறுதியாக இருந்தவரான அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஏன் அந்தச் சொல்லைச் சேர்க்க வலியுறுத்தவில்லை? சரியாகச் சிந்திக்கிற ஒருவர் இந்தக் கேள்விகளைக் கேட்கக்கூடும். சாசனத்தின் இயல்பிலேயே, இது குறிப்பிட்ட எந்த மதத்தையும் சார்ந்த நாடு என்று அறிவிக்கப்படவில்லை என்ற காரணத்தால், மதச்சார்பின்மைக் கோட்பாடு பொதிந்திருக்கிறது. ஆகவேதான் அம்பேத்கர் அதைச் சேர்க்கவில்லை, நேரு உள்ளிட்டோர் அதை வலியுறுத்தவில்லை.
ஒரு சுருக்கமான வரலாறைத் தெரிந்துகொள்ளலாம். இந்திய விடுதலைக்காகப் போராட்டக் களம் கண்டவர்களை மூன்று தலையாய அணிகளாக வகைப்படுத்தலாம். அந்நிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதே லட்சியம், அது எந்த மதத்தின் நாடாகவும் இருக்கக்கூடாது என்றும் நமக்கான அரசுக் கட்டமைப்பு உள்பட நாமே முடிவு செய்துகொள்வோம் என்றும் களமிறங்கியவர்கள் ஒரு அணி. ஒரு அடையாளத்திற்காக, காந்தி தலைமையில் அந்த அணி திரண்டது என்று குறிப்பிடலாம். இரண்டாவது அணியினர், அந்த ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றோடு, சமத்துவத்தை நிலைநாட்டிய இந்தியாவாகவும் இருக்க வேண்டும், அப்போதுதான் விடுதலை முழுமையடையும் என்று கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமையில் களமிறங்கியவர்கள். பகத் சிங் அதற்கான உருவகம் எனக் கொள்ளலாம். மூன்றாவது அணியினர், விடுதலை பெற்ற இந்தியா சில மேற்கத்திய கிறிஸ்துவ நாடுகள் போல, சில மத்திய கிழக்கத்திய முஸ்லிம் நாடுகள் போல, ஒரு இந்து நாடாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள். சவர்க்கார் இவர்களது சின்னம் எனலாம். ஆயினும் விடுதலை பெற்ற இந்தியா, மூன்றாவது அணியினரின் நோக்கத்தை முற்றிலுமாக ஏற்கவில்லை. இரண்டாவது அணியினரின் நோக்கம் ஓரளவு ஏற்கப்பட்டது. முதல் அணியினரின் நோக்கம் பெருமளவுக்கு ஏற்கப்பட்டது.
அரசமைப்பு சாசனத்தில், இந்தியா எந்தவொரு மதம் சார்ந்த நாடாக அறிவிக்கப்படாததற்கும், சமத்துவ உரிமைகளுக்கான சட்டங்கள் சேர்க்கப்பட்டதற்கும் இதுதான் பின்னணி. ஆனால், தங்களது நோக்கம் நிறைவேறாததால், அதை வலியுறுத்திய ஆர்எஸ்எஸ் தலைமையிலான மூன்றாவது அணியினர் அப்போதிருந்தே அந்த ஆத்திரத்தைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். காந்தி கொலை முதல், இன்றளவும் நடக்கிற சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் வரையில் அது வெளிப்பட்டு வந்திருக்கிறது. இப்படியே விட்டால் இது முஸ்லிம் நாடாகிவிடும் என்று எந்த முகாந்திரமும் இல்லாமல் ஒரு பகுதி இளைஞர்களை நம்பவைத்து வன்முறையில் இறக்கிவிடுவதில் அது வெளிப்படுகிறது.
ஏதோ இந்தியா என்ற நாடு காலங்காலமாக இருந்து வந்தது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துவது, வேதங்கள்தான் அதன் மறை நூல்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பது, பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வற்புறுத்துவதன் மூலம் சர்ச்சைகளைக் கிளப்புவது, வேதகால.த்திலேயே ஸ்டெம் செல் சிகிச்சை உள்ளிட்ட அறிவியல் முன்னேற்றங்கள் இருந்தன என்பதாகக் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுவது, கலாச்சாரப் பெருமை என்ற போர்வையில் பெண்ணடிமைத்தனம், சாதிப்பாகுபாடு உள்ளிட்ட பழங்கொடுமைகளை நியாயப்படுத்துவது என்பன போன்ற சிந்தனைத் தள வன்முறைகளும் இந்த நோக்கத்தோடு சம்பந்தப்பட்டவைதான். இப்போது, இந்துக் கோவில்களில் கிரிகோரியன் காலண்டர்படியான புத்தாண்டுப் பிறப்பின்போது வழிபாடு செய்வதற்காக நடை திறக்கக்கூடாது என்று ஆணையிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படுவதும் அந்த உத்தியோடு தொடர்புள்ளதுதான்.
சிலர் இதை நாசூக்காகப் பேசத் தெரியாதவர்களாக, உண்மை முகத்தை உரித்துக் காட்டிவிடுகிறார்கள். அது பெரும் எதிர்ப்புக்கு உள்ளாகிறபோது, இதெல்லாம் அவர்களுடைய சொந்தக் கருத்து, அதற்கும் பாஜக-வுக்கும் சம்பந்தமில்லை என்பதாகப் பதுங்கிவிடுவார்கள். இப்போது இந்த இணையமைச்சர் பேசியது நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தியிருக்கிற நிலையில் பாஜக இப்படித்தான் சொல்லியிருக்கிறது.
பாஜக அப்படிப் பதுங்குகிற அளவுக்கு, இணையமைச்சர் பேச்சு அருவருப்பானதாக மட்டுமல்லாமல் ஆபத்தானதாகவும் இருக்கிறது. “மதச்சார்பற்றோர் என்றும் முற்போக்காளர்கள் என்றும் சொல்லிக்கொள்கிறவர்கள் அவர்களது தாய் தந்தை அடையாளம் இல்லாதவர்கள், அவர்களது ரத்தமும் ஓடாதவர்கள். எவரொருவருக்கும் அப்படி அடையாளம் இருந்தால்தான் சுய மரியாதை கிடைக்கும்,” என்று அவர் பேசியிருக்கிறார்.
அது போதாது என்றோ, தனது பேச்சின் நோக்கம் முழுமையாகப் போய்ச்சேராது என்றோ நினைத்தாரோ என்னவோ, அதன் பிறகு, “தங்களை யாரேனும் முஸ்லிம், கிறிஸ்துவர் , பிராமணர், லிங்காயத் அல்லது இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்வாரானால் நான் மகிழ்ச்சியடைவேன். தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்கிறபோதுதான் பிரச்சனை ஏற்படுகிறது,” என்று அவர் ‘தெளிவு படுத்தும் வகையில்’ பேசியிருக்கிறார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் வேளையில் அவர் இப்படிப் பேசியதற்கு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. எந்த அரசமைப்பு சாசனத்தின் மீது உறுதியேற்றுப் பதவியில் அமர்ந்தாரோ, அந்த அரசமைப்பு சாசனத்தை அவர் அவமானப்படுத்திவிட்டார் என்று குற்றச்சாட்டுகள் உரக்க ஒலிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்வதற்கும், இணையமைச்சராக வலம் வருவதற்கும் உள்ள தகுதியை அவர் இழந்துவிட்டார் என்ற சாடல்களும் ஒலிக்கின்றன. வழக்கம் போல் இது பற்றி பிரதமர் நரேந்திர மோடியாரின் ‘மன் கி பாத்’ ஒலிக்கவில்லை.
இது இவரது தனிப்பட்ட கருத்து என்று ஒதுக்கிவிடுவதற்கில்லை. மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டை ஒரு வன்மத்தோடு சங் பரிவாரத்தினர் கொச்சைப் படுத்தி வருவதன் தொடர்ச்சிதான் இது. கொச்சைப்படுத்துகிற திட்டத்தின் ஒரு உத்திதான், அதைப் பற்றிய தவறான எண்ணத்தைப் பரப்புவது. நாட்டின் மக்களே மதச்சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மைக் கோட்பாடு என்று சித்தரிப்பது அந்த உத்தியின் ஒரு பகுதி.
நாட்டின் அரசமைப்பு சாசனம் எந்த இடத்திலும் இந்தியாவின் மக்கள் மதச்சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்று கூறவில்லை. மதச்சார்பின்மைக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்போரும் அதற்காக நிற்போரும் வாதாடுவோரும் போராடுவோரும் அப்படிச் சொல்லவில்லை.
அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்துவது, இந்திய அரசு மதச்சார்பற்றதாக இருக்கும் என்பதைத்தான். அரசாங்கக் கட்டமைப்பும் அரசு எந்திரமும் மதச்சார்பற்றதாக இருக்கும் என்பதே அதன் பொருள். சொல்லப்போனால், “செக்கூலர்” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மதச்சார்பற்ற என்பது மட்டுமே முழுமையான பொருளல்ல. நேரடியான அகராதிப் பொருள் “நடுநிலை” என்பதேயாகும். மதம், சாதி, வர்க்கம், மொழி, இனம் என்ற எந்தச் சார்பும் இல்லாத நடுநிலையே இந்திய அரசமைப்பு சாசனத்தின் கம்பீரம். உலக நாடுகள் வியந்து போற்றுகிற பெருமிதம்.
இன்னும் சொல்லப்போனால், குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கான உரிமையை சாசனம் உறுதிப்படுத்துகிறது. இதனை, குடிமக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் நம்புகிற கடவுளை வழிபடும் உரிமை, அந்தக் கடவுளை மையமாகக் கொண்ட மதத்தைப் பின்பற்றுகிற உரிமை என்று விரிவுபடுத்திப் புரிந்துகொள்ளலாம். மேலும் சொல்லப்போனால், எந்தக் கடவுளையும் நம்பாமல் இருக்கிற, எந்த மதத்தையும் பின்பற்றாமலிருக்கிற, நாத்திகம் என்ற சித்தாந்தத்தை ஏற்கிற, அதைப் பின்பற்றுகிற உரிமையும் இதன் மூலம் நிலைநாட்டப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதற்கு முன், சாசனம் என்ன சொல்கிறது என்பதற்கான பயிற்சி வகுப்பு ஏதாவது நடத்தப்பட்டால் நல்லது.
அரசமைப்பு சாசனம் வழங்குகிற இந்த உறுதிப்பாடு இப்போது மட்டுமல்ல, கடந்த காலத்திலும் கொச்சையாகக் கையாளப்பட்டு வந்திருக்கிறது. அரசு அலுவலகங்களில் அனைத்து மதங்களின் வழிபாடுகள் நடைபெறுவதற்கு இடமளிக்கப்பட்டது. அலுவலர்களும் ஊழியர்களும் தங்களது சொந்த நம்பிக்கைகளைத் தங்களின் வீடுகளில் பின்பற்றுவதற்கு எந்தத் தடையுமில்லை. அலுவலகத்திற்குள் வருகிறபோது அவர்கள் மதச்சார்பற்ற அரசின் பணியாளர்களே. அரசு நிறுவனமாக உள்ள வானொலியில் காலையில் அமுதகானம் அல்லது அருளமுதம் என்ற பெயரில் ஒலிபரப்புகள் வருகின்றன. பக்திப்பாடல்கள்தான் முழுக்க முழுக்க. பெரும்பாலான பாடல்கள் இந்து மதம் சார்ந்தவையாக இருக்குத்ம். ஒரு முஸ்லிம் பாடல், ஒரு கிறிஸ்தவப் பாடல் என ஒலிக்கும். ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற விழாக்கள் வருகிற நாட்களில் அந்தச் சமயங்களின் பாடல்கள் முன்னுரிமையோடு ஒலிபரப்பப்படும். சமணம், புத்தம், சீக்கியம் போன்ற மதங்களின் பாடல்களை நான் கேட்டதில்லை. அந்த மதங்களைச் சேர்ந்த மக்கள் கூடுதலாக உள்ள மாநிலங்களில் அந்தப் பாடல்களும் ஒலிபரப்பபப்படும் என்று நினைக்கிnன். அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிகளிலும் இதுவே நிலவரம். இவற்றில் எப்போதாவது நாத்திகக் கருத்தைக் கூறும் பாடல்கள் காலை நேர அமுதகானமாகவோ அருளமுதமாகவோ ஒலி/ஒளிபரப்பப்படுமா என்று கேட்கலாம்தான். ஆயினும் எந்த மதத்தின் பாடலையும் ஒலி/ஒளிபரப்பாமல் இருந்தால் என்றுதான் கேட்க விரும்புகிறேன்.
சங் பரிவாரத்தினரிடம் பேசிப் பார்த்தால், “ஆம் இதைத்தான் நாங்கள் போலி மதச்சார்பின்iமை என்கிறோம்,” என்பார்கள். ஆனால் அவர்கள் இப்படிச் சொல்வதன் நோக்கம், அரசு அமைப்புகளில் மத அடையாளம் கூடாது என்ற நோக்கத்துடன் அல்ல. எல்லா மதங்களைச் சேர்ந்தோரையும் திருப்திப்படுத்துகிற ‘போலி மதச்சார்பின்மை’ ஏற்பாட்டைக் கைவிட்டு, அந்த இடத்தில் ஒற்றை மத ஆளுமைக்குரிய ஏற்பாட்டைத் திணிக்க வேண்டும் என்பதே அவர்களது அவா. வானொலியில், தொலைக்காட்சியில் இந்து மதப்பாடல்களும் நிகழ்ச்சிகளும் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே, வெளியே காட்டிக்கொள்ளாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உள்ளக்கிடக்கை.
மேடு பள்ளமாக இருக்கிற ஒரு தளம் சமமாக்கப்படும். பரவாயில்லையே என்று பரவசத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறபோது அந்தச் சம தளத்தில் ஜல்லிகள் போடப்பட்டு, சிமென்ட் கலவை கொட்டப்பட்டு ஒரு கான்கிரீட் தளம் ஏற்படுத்தப்படும். எந்தச் செடியையும் துளிர்க்கவிடாத அந்தத் கான்கிரீட் தளம் போல இந்திய மண்ணை மாற்றுவதே இவர்களது இலக்கு. அதற்காகவே இப்படியான பேச்சுகள். அனைத்து நம்பிக்கைகளும் செழித்திருக்க, பன்முகப் பண்பாடு தழைத்திருக்க வழி செய்யும் இந்திய அரசமைப்பு சாசனத்தையும் அதன் சார்பின்மைக் கோட்பாட்டையும் நாட்டு மக்கள் தகர்க்க முடியாத கோட்டையென எழுந்து காப்பார்கள், அந்த இலக்கைத் தகர்ப்பார்கள்.