சென்னை,
கடந்த ஜூன் மாதம் மலேசியா சென்ற வைகோவுக்கு, நாட்டில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. அதற்காக தற்போது மலேசிய அரசுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் இராமசாமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றார்.
அவரை நாட்டுக்குள் விட மறுத்த மலேசிய அரசு, விமான நிலையத்திலேயே தடுத்து வைத்தது. “விடுதலைப்புலிகள் ஆதரவாளர் என்று கூறி தான் தடுத்துவைக்கப்பட்டதாக வைகோ அப்போது தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் வைகோ. அதற்கு இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து தற்போது பதில் கடிதம் வந்திருக்கிறது.
அதில், “2017 ஜூன் 9 ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் சந்திக்க நேர்ந்த துரதிருஷ்ட வசமான சம்பவம் குறித்து பிரதம அமைச்சர் அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்து இருந்தீர்கள்.
இந்தப் பிரச்சினை குறித்து கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், மலேசிய நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு தனது கடுமையான ஆட்சேபணையைத் தெரிவித்து உள்ளது.
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகமும், புதுடெல்லியில் உள்ள மலேசிய நாட்டின் தூதரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து நடந்த சம்பவம் குறித்து இந்திய அரசின் ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.