டில்லி:

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு வெளிநாட்டு நிதியுதவியை பெற ஒரு மாதத்துக்குள் கட்டாயம் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று உள்துறை தெரிவித்துள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற சட்டத்தில் வழிவகை உள்ளது. இந்த நிதியுதவி தேச நலனுக்கு எதிராக பயன்படுத்துவது கிடையாது என்பதை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதியுதவியை ஒரு வெளிநாட்டு வங்கி உள்பட 32 இந்திய வங்கிகள் மூலம் பெறும் வகையில் ஒரு மாதத்திற்குள் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிப்படைத் தன்மையை உறுதிபடுத்துவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்குகள் மத்திய அரசின் பொது நிதி மேலாண்மை திட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த வங்கிகளின் விபரம்:

அபுதாபி கமர்சியல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, தி காஸ்மோஸ் கூட்டுறவு வங்கி, பாங்க் ஆப் பரோடா, எஸ்பிஐ, சவுத் இந்தியன் வங்கி, ஐடிபிஐ வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, கார்பரேஷன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, தி கத்தோலிக் சிரியன் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, யுகோ வங்கி இண்டஸ் இண்ட் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி.

பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் உ.பி கிராமின் வங்கி, டிசிபி வங்கி, மணிப்பூர் மாநில கூட்டுறவு வங்கி, விஜயா பாங்க், பாம்பே மெர்கண்டைல் கூட்டுறவு வங்கி, எஸ் பேங்க், ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ், தேனா பாங்க், பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, ஆந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் கணக்கு தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர தொண்டு நிறுவனங்கள் செயல்படுத்தும் திட்டங்கள், செயல்படுத்தும் முகமைகள் உள்ளிட்ட பல தகவல்களை பராமரிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு ஏற்ப தொண்டு நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியுதவியை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜ்ஜூ பேசுகையில், ‘‘வீதி மீறல்கள் தொடர்பாக 2011 மற்றும் 2017ம் ஆண்டுகளில் 18 ஆயிரத்து 868 தன்னாவ தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2015&16ம் ஆண்டில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெற்ற வெளிநாட்டு நிதியுதவி 17 ஆயிரத்து 773 கோடி ரூபாயாகும். இது 2016-17ம் ஆண்டில் 6 ஆயிரத்து 499 கோடி ரூபாயாக குறைந்துள்ளது’’ என்றார்.