சென்னை,
பூந்தமல்லி அருகே மூடப்பட்ட நோக்கியா செல்போன் தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், அதற்கான பேச்சு வார்த்தை நடைபெறுகிறது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார்.
சென்னை வந்துள்ள மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சென்னையில் மூடப்பட்ட நோக்கியா செல்போன் தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்காக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த தொழிற்சாலைக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. விரைவில் வியக்கத்தக்க வகையில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.
மேலும், இந்தியாவை டிஜிட்டல் நாடாக மாற்ற முயற்சித்து வருகிறோம். இதற்காகவே சிறு நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (பி.பி.ஓ.) தொடங்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள சிறு நகரங்களில் 23 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்க திட்டமிடப்பட்டு அதில், 16 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் 200 பெண்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கிராம பஞ்சாயத்துகளில் 12 ஆயிரம் பொது சேவை மையங்கள் திறக்க திட்ட மிடப்பட்டு, இதில் 9 ஆயிரம் மையங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தொழில் தொடங்குவோரையும், சொந்த வியாபாரம் செய்பவர்களையும் ஊக்கப்படுத்த முத்ரா திட்டத்தின் கீழ் 8 லட்சம் இந்தியர்களுக்கு ரூ.4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
தற்போது, நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் 40 லட்சம் பேர் நேரடியாகவும், ஒரு கோடி பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள்.
மேலும் புதிய தொழில்நுட்பம் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அந்த தொழில்நுட்பம் முன்னேற்றம் அடையும்போது 500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.