லக்னோ
அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் முத்தலாக் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என அரசிடம் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய ஆண்கள் தங்கள் மனைவியிடம் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் எனக் கூறி விவாகரத்து பெறுவதை தடுக்க சட்ட வரைவு ஒன்று மத்திய அரசால் வரும் வாரம் பாராளுமன்றத்தில் அளிக்க உள்ளது. அதன்படி அவ்வாறு செய்யும் ஆண்களுக்கு மூன்று வருடம் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு பல இஸ்லாமிய அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அகில இந்திய இஸ்லாமிய தனிச்சட்ட வாரியம் இந்த சட்ட வரைவை பாராளுமன்றத்தில் அளிக்கக்கூடாது என ஒரு அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது. அந்த அறிக்கையில், “முத்தலாக் தடை சட்டம் என்பது இஸ்லாத்துக்கு எதிரானது. இஸ்லாமிய ஆண்களின் விவாகரத்து உரிமையை பறிக்கும் சட்டமாகும். இந்த சட்ட வரைவு இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை எதிர்த்தல், இஸ்லாமியப் பெண்களின் உரிமையில் தலையிடுதல், இஸ்லாமிய தனி சட்டத்தை ரத்து செய்தல் ஆகியவைகளை உண்டாக்குவதாக இந்த வாரியம் கருதுகிறது. இந்த சட்ட வரைவை பாராளுமன்றத்தில் அரசு அளிக்கக் கூடாது என வாரியம் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து வாரியத்தின் மூத்த பெண் உறுப்பினரான அஸ்மா ஜெஹ்ரா, “இந்த சட்ட வரைவு பெண்களுக்கு எதிரானது. இந்த சட்டம் அமுல் ஆனால் ஒரு பெண்ணின் கணவன் மூன்று முறை தலாக் சொன்னால் மூன்று வருடம் சிறைக்கு அனுப்பப்படுவார். ஆனால் அவ்வாறு கணவன் சிறைக்கு அனுப்பப் பட்டால் அந்த பெண் மற்றும் குழந்தைகளை யார் கவனிப்பார்கள்? அவர்களின் வாழ்க்கைக்கு வழி என்ன என்பதை இந்த சட்டம் சொல்லுமா?” என வினா எழுப்பி உள்ளார்.