சென்னை:

ய்வாளர் பெரியபாண்டியனை கொன்றது உடன் இருந்த சக ஆய்வாளரே என கொள்ளையன்  நாதுராமின் மனைவி ராஜஸ்தான் போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை நகைக்கடை கொள்ளை சம்பந்தமாக கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், ராஜஸ்தான் போலீஸ் எஸ்பி தீபக் பார்கவ் கூறும்போது, சுட்டுக்கொல்லப்பட்ட பெரிய பாண்டியன் உடலில் இருந்து  மற்றொரு இன்ஸ்பெக்டரான முனிசேகரின் துப்பாக்கி குண்டு என்று கூறியிருந்தார்.

முனிசேகர் கொள்ளையரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது குறி தவறி பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது என இருவரது துப்பாக்கிகளையும் ஆய்வு செய்தபின் தெரியவந்துள்ளது என்று எஸ்பி தெரிவித்துள்ளார்.

இது மேலும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெரியபாண்டியன் உடன் சென்ற கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் அளித்த புகாரின் பேரில் ராஜஸ்தான் மாநிலம் செய்தரன்பாலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கொள்ளையன் நாதுராமை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது,  நாதுராம் தம் மனைவியுடன் ஜோத்பூரின் மாலாவாஸ் கிராமத்தில் ஒளிந்திருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில் இன்று மாலை ராஜஸ்தான் போலீஸ் படை சுற்றி வளைத்ததில் நாதுராமின் மனைவி மஞ்சு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், கொள்ளையன் நாதுராம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். கைது செய்யப்பட்ட மஞ்சுவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பெரிய பாண்டியனை சுட்டுக் கொன்றது அவருடன் வந்த சக போலீசார்தான் என்று சொன்னதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பெரிய பாண்டியனை சுட்டுக்கொன்றது உடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது.