சென்னை,
ஓகி புயல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்னும் திரும்பாத நிலையில், அவர்களை கண்டுபிடித்து தரும்படி அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, கேரள அரசு, அம்மாநில மீனவர்களை தேடுவது போல் தமிழகஅரசு தமிழக மீனவர்களை தேடுவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் காணமல் போன அனைத்து தமிழக மீனவர்களும் மீட்கப்படுவர்கள் என கூறியது.
மேலும் மீட்புப்பணியில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 25 கப்பல்கள், ஹெலிகாப்படர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய தினம் வரை 47 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், இன்னும் 271 மீனவர்களை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், 271 மீனவர்களை மீட்கும் பணி விரைவாக நடைபெற்று வருவதாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னரே அனைத்து மீனவர்களை கண்டுப்பிடித்து விடலாம் என்று கருதுவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில், ஆரம்பத்தில் இருந்தே அரசு தாமதமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டது.
அத்துடன் மீனவர்களை கண்டுப்பிடிப்பதற்கு கடலுக்கு எத்தனை கப்பல்கள் அனுப்ப பட்டுள்ளனர்? என்றும், மீனவர்களை மீட்க என்னனென்ன முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன? என்றும் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
எனவே, இதுகுறித்து விரிவான தகவல்களை தெரிவிப்பதற்காக தமிழக அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.