சென்னை:
ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிப்போர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயா டிவி சிஇஒ விவேக் தெரிவித்துள்ளார்.
ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சிலர் மனசாட்சியற்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவருடைய மகள் என்று சிலர் அவதூரு பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது.
எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் இது போன்ற கதை, கற்பனைகளை கிளப்பிடுவதை சகித்துக் கொள்ள முடியாது. இது மனசாட்சி அற்ற செயல். ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு செய்திகள், வதந்திகளை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில், ‘‘இத்தகயை செய்திகளை சில ஊடகங்கள் தவிர்த்தாலும், சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. ஒன்றரை வயதில் தந்தையை இழந்த எண்ணை பெற்ற அன்னையாக அவர் பேணி காத்தார். வளர்ப்பு மகனாக சுதாகரனை தத்தெடுத்து அதை வெளிப்படையாக அறிவித்தவர் ஜெயலலிதா.
அதனால் அவருக்கு என்று யார் இருந்தாலும் அதை ஜெயலலிதா மறைத்திருக்க மாட்டார். ஜெயலலிதா மீது அவதூறு பரப்புவோர் மீது அவரால் உருவாக்கிய ஆட்சியின் மூலம் பதவிக்கு வந்தவர்கள் கண்டிக்கவோ தடுக்கவோ செய்யாமல் இருந்தாலும், எனக்கு அந்த பொறுப்பு உள்ளது. ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் இனி யார் ஈடுப்டடாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.