சென்னை,

த்திரப்பதிவுத் துறையில் நடக்கும் ஊழல், இடைத்தரகர்கள் குறித்த வழக்கில் பத்திரப் பதிவுத்துறை தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்றைய விசாரணையின்போது, பத்திரப்பதிவு துறை சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் போதி விளக்கம் இல்லை என்று ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

 

தமிழகத்திலே அதிக அளவு லஞ்ச லாவண்யம் நடைபெற்று வரும் அரசு அலுவலங்களில் முதன்மையானது பத்திரப்பதிவு அலுவலகம். இந்த  பத்திரப்பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் குறுக்கீடு அதிக அளவில் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தாத்தாவின் சொத்து பத்திரங்களை தனது பெயருக்கு மாற்றித்தர கோரி பூபதி என்பவர் பத்திரப் பதிவு துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், பத்திரப்பதிவு அலுவலகம் அவருக்கு பதிவு செய்து தராமல் இழுத்தடித்து வந்தது.

இதன் காரணமாக, த்திரப்பதிவுத் துறைக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்தார்.ஏற்கனவே இந்த வழககின்போது, நீதிபதி கிருபாகரன் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள், அதன் வாயிலாக பறிமுதல் செய்யப்பட்ட பணம், வழக்குகள், தவறிழைத்த அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்து, தமிழக பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன், வணிகவரித்துறை மற்றும் பத்திரப் பதிவுத்துறை செயலர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழகத்தில் உள்ள 578 சார்பதிவாளர் அலுவலகங்களில், 155 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். அதன் காரணமாக சுமார்  70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், இது  சம்பந்தமாக 77 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் 2 பேர் மட்டும் தண்டிக்கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி இருந்தனர்.

மேலும், தரகர்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறியிருந்தனர்.

பதிவுத்துறை தலைவர் தாக்கல் செய்த பதில் மனுவில்,   பதிவுத்துறை அலுவலகத்தில் உள்ள கணிப்பொறி அறை, ஆவண அறை உள்ளிட்டவற்றில் மூன்றாம் நபர்கள் நுழையாமல் தடுக்க ஸ்டார் 2.0 என்ற மென் பொருள் பொருத்தும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், இது அமலுக்கு வரும் போது, அதிகாரிகள் மட்டுமே நுழைய முடியும் என கூறப்பட்டுள்ளது.

இந்த பதிலை  ஏற்க மறுத்த நீதிபதி கிருபாகரன், 10 வருடத்தில் இவ்வளவு குறைவான தொகை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், அடுத்த விசாரணையின் போது உரிய பதிலை தாக்கல் செய்யாவிட்டால், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட வேண்டி வரும் என எச்சரித்தார்.

விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.