சென்னை,
டிடிவி தினகரன் தன்மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கை இழுத்தடிக்க நினைக்கிறார் என்று கோர்ட்டில் அமலாக்கத்துறை புகார் கூறி உள்ளது.
வெளிநாட்டில் இருந்து தனியார் டிவி ஒன்றுக்கு ஒளிபரப்பு சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட தில் முறைகேடு கள் நடைபெற்றது. இதன்மூலம் பெறப்பட்ட பணம், இங்கிலாந்தின் வர்ஜின் தீவில் பர்க்லே வங்கி மூலம் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம், ஐரோப்பா லண்டன் ஹாப்ஸ் கேரப்ட் ஓட்டல் பெயரில் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
மேலும், அதேபோல், டிப்பர் இன்வெஸ்மென்ட், பேனியன் டிரீ, டர்க்கி என்ற நிறுவனங்களுக்கு 36.36 லட்சம் அமெரிக்க டாலரையும், 1 லட்சம் பவுண்ட் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக ஒரு வழக்கும் அமலாக்கப் பிரிவால் தொடரப்பட்டது.
1996ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலோக நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கின் விசாரணை, எழும்பூர் சென்னை இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, அமலாக்கத்துறை சாட்சிகள் உட்பட 17 பேரை விசாரிக்க வேண்டும் என டிடிவி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை சார்பில் இன்றைய விசாரணையின்போது வாதாடப்பட்டது.
அப்போது, தனது தரப்பு சாட்சிகளை விசாரிக்க சொல்வதன் மூலம் வழக்கை இழுத்தடிக்க டிடிவி நினைக்கிறார் என்றும், டிடிவி விசாரிக்க கோரும் சாட்சிகளில் சிலர் உயிருடன் இல்லை எனவும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார்.
வழக்கு விசாரணை இன்றுடன் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது நீதிமன்றம்.