சென்னை:

முறையான அனுமதி பெறாமல் இயங்கிய சென்னை கே.கே. நகர் சரவண பவன் கிளை சி.எம்.டி.ஏ. அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டுள்ள பிரபல உணவகமான சரவண பவனுக்கு  சென்னை மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன.

இந்த நிலையில் இந்த உணவகத்தின் மீது தொடர்ந்து புகார்கள் கிளம்பி வருகின்றன.

வாகன நிறுத்தத்துக்கு இடம் ஒதுக்காமல் செயல்பட்ட சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை சரவணபவன் உணவக கிளை கடந்த ஜனவரி மாதம் சீல் வைக்கப்பட்டது.

அதற்கு முன்பாக, போலி ஆவணம் தயாரித்து ஓட்டல் ஊழியர்களை அமெரிக்காவுக்கு அனுப்பிய வழக்கில் சரவணபவன் உணவக  இயக்குனர் சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.  அவருக்கு அமெரிக்கா செல்ல  அமெரிக்க தூதரகம் ஆயுட்கால தடை விதித்தது.

இந்த நிலையில் இன்று சென்னை கேகே நகரில் செயல்பட்டு வந்த சரவண பவன் கிளைக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.

முறையான அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டியதால் சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சரவணபவன் உணவக நிர்வாகம் மீது தொடர்ந்து புகார்கள் வருவது குறிப்பிடத்தக்கது.