னாஜி

போதை மருந்து சாப்பிட்டால் இரவு முழுதும் நடனமாடலாம், ஆனால் மது அருந்தினால் அது முடியாது என்பதால்  விருந்துகளை அரசு கண்காணித்து வருகிறது  என கோவா முதல்வர் கூறி உள்ளார்.

கோவா ஒரு சுற்றுலாத்தலம் என்பதுடன் பல உல்லாச கேளிக்கைகள் நிகழும் தலமாகவும் உள்ளது.   இங்கு பல வெளிநாட்டவர்கள் வருவதால் இங்கு பார்ட்டிகள் மிகவும் பிரபலமாகி வருகிறது.    அந்த பார்ட்டிகளில் மது மட்டுமின்றி போதை மருந்தும் சில இடங்களில் வழங்கப் படுகிறது.   இது குறித்து  கோவா சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப் சிங் ராணே ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.   அதற்கு பதில் அளித்து கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பேசினார்.

அவர், “எங்கெங்கு போதை மருந்துகள் அதிகம் புழங்குகின்றன என்பதை இந்த அரசு கண்டு பிடித்து வருகிறது.   இந்த போதை மருந்து வியாபாரிகளை உடனடியாக பிடிக்க அரசு ஆவன செய்து வருகிறது.    இங்கு பல வெளிநாட்டவர்கள் வருகின்றனர்.   அவர்களிடையே போதை மருந்து விற்பனை என்பது இந்த வியாபாரிகளுக்கு சுலபமாக உள்ளது.    வெளிநாட்டுப் பயணிகள் பார்ட்டி நடத்தும் போது இது போன்ற போதை மருந்து பார்ட்டிகள் சகஜமாகி வருகிறது.

போதை மருந்து உட்கொண்டவர்கள் இரவு முழுவதும் நடனம் ஆடுவார்கள்.   ஆனால் மது அருந்தியவர்களால் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு மேல் ஆட முடியாது.    எனவே இது போல் இரவு முழுவதும் நடைபெறும் பார்ட்டிகளில் நிச்சயம் போதை மருந்துகள் உபயோகப் படுத்தப் பட்டுள்ளன.   எனவே இது போன்ற பார்ட்டிகளை அரசு கண்காணித்து வருகிறது”  என பதில் அளித்துள்ளார்.