மும்பை:
குஜரத்தில் உண்மையான வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு தான் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் பாஜக 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு பாஜக ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத் கூறுகையில், ‘‘குஜராத்தில் உண்மையான வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு தான். ஆட்சிக்கு வருவது என்பது பெரிய விஷயம் கிடையாது.
காங்கிரஸ் தேர்தலில் வேண்டும் என்றால் தோல்வியை தழுவியிருக்கலாம், ஆனால் பாஜக.வை தோல்வி அடைய செய்துவிட்டது. குஜராத்தில் பாஜக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் உள்ளது, குஜராத் மாடல் என்ற கோஷத்தை முன்வைத்து தான் பாரதீய ஜனதா தேசத்தில் ஆட்சிக்கு வந்தது. இப்போது குஜராத் மாடல் தோல்வியை தழுவிவிட்டது’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில்,‘‘ குஜராத் மாநிலத்தில் பாஜக செயல்பாட்டில் மக்கள் மகிழ்ச்சி அடையவில்லை என்றால் நாட்டில் உள்ள மக்களின் மனநிலையை புரிந்துக்கொள்ள வேண்டும். தேர்தல் மட்டுமின்றி பாகிஸ்தான், பாதுகாப்பு, காஷ்மீர், ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் வேலைவாய்ப்பு, விவசாயம் என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வியை தழுவிட்டது’’ என்றார்.