வெற்றி பெற்ற நடிகர்கள், மேடை போட்டு தையல் மிஷின், அயர்ன் பாக்ஸ் எல்லாம் கொடுப்பது பரபரப்பான செய்திகளாக வெளியாகும்.
ஆனால் திரைத்துறையில் தங்களுக்கென ஓர் இடத்தைப் பிடிக்க போராடிக்கொண்டிருக்கும் ஆரம்பகட்ட நடிகர்கள் சத்தமின்றி ஒரு சமுதாயப்பணியைச் செய்து வருகிறார்கள்.
துணை இயக்குநர் செந்தில் என்பவரின் தலைமையில் இயங்கும், “இனி ஒரு விதி செய்வோம்” என்ற அமைப்பு சென்னையில் பல பகுதிகளில் சாலையோரத்தில் மரக்கன்று நடும் பணியைச் செய்து வருகிறது.
கடமைக்குச் செய்யாமல் கடமையாக இந்தப் பணியை செய்கிறார்கள் இந்த அமைப்பினர். இரண்டரை அடி அகலம் நாலரை அடி ஆழம் வியர்க்க விறுவிறுக்க மண்ணைத் தோண்டி, பக்குவமாய் மரக்கன்றுகளை நடுகிறார்கள். அதோடு, பக்காவாக கூண்டு அமைத்து, பாதுகாப்பாக நட்டுவிட்டுப்போகிறார்கள்.

“தொடர்ந்து அந்த செடிகளை யார் பராமறிப்பார்கள்..” என்று துணை இயக்குநர் செந்திலிடம் கேட்டோம்.
“தற்போது சென்னையின் முக்கிய சாலைகளின் ஓரத்தில் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். அப்படி நடும்போது, அருகில் உள்ள கடைக்காரரிடம் விவரத்தைச் சொல்லி அவர்களது முழு சம்மதத்துடனே நடுகிறோம். அந்த மரக்கன்றை அருகில் இருக்கும் கடைக்கரரைக் கொண்டு நடச் செய்கிறோம். அதோடு, அவரது தாயாரின் பெயரை அந்த மரக்கன்றுக்கு இடுகிறோம். அவர்களது அலைபேசி எண்களை வாங்கி, “அம்மாவுக்கு தண்ணீர் ஊற்றினீர்களா.. அம்மா எப்படி இருக்கிறார்” என்று அவ்வப்போது கேட்டு வருகிறோம்.
அம்மாவைப் பிடிக்காதவர் யார்..? நாங்கள் இது வரை நட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் அவர்களது பிள்ளைகள்.. அதான், கடைக்காரர்கள் சிறப்பாக கவனித்துக்கொள்கிறார்கள்” என்று சென்டிமெண்ட் டச்சுடன் சொல்கிறார் செந்தில்.
மேலும், “இதுரை சாலிகிராமம், தி.நகர், கே.கே. நகர் பகுதியில் நட்டோம். தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வடபழனி சிக்னல் வரை நட்டிருக்கிறோம். தொடர்ந்து நடுவோம்.

இதுவரை சிறப்பு அழைப்பாளர்களாக வந்து இசையமைப்பாளர் தாஜ்நூர், நடிகை நந்திதா, நடிகர்கள் சிசர் மனோகர், விஐய் கணேஷ் நடனக்கலைஞர் காஞ்சனா ரேவதி போன்றவர்கள் வந்திருந்து மரக்கன்று நட்டார்கள்.
எவரிடமும் நாங்கள் பணமாக நன்கொடை பெறுவதில்லை. மரக்கன்றுகள், மரக்கன்றுகளைப் பாதுகாக்குகும் மரக்கொம்புகள் , பாதுகாப்பு துணிகள், மண்வெட்டி போன்றவற்றையே நன்கொடையாக பெறுகிறோம். பலரும் உதவி செய்து வருகிறார்கள்.
சென்னை சாலைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். சிமண்ட் ஜல்லியால் போடப்பட்டு கடினமாக இருக்கும். இதை நான்கரை அடி ஆழம் இரண்டரை அடி அகலம் தோண்டி எடுக்க வேண்டும். பிறகு அவற்றில் நல்ல மண் கொட்டி நிரப்பி மரக்கன்றுகளை நடுகிறோம். பள்ளம் தோண்ட வசதியாக ட்ரில்லர் மிஷின் யாரேனும் நன்கொடையாக அல்லது வாடகை இன்றி அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார் செந்தில்.
நல்ல மனங்களின் கோரிக்கை நிறைவேறட்டும். சென்னையில் மரங்கள் தழைக்கட்டும்.
[youtube-feed feed=1]