சென்னை:

கடலூரில் ஆய்வு செய்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைவில் பெண் குளிப்பதை பார்த்ததாக பரவிய செய்தி தவறு என்று கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆய்வு நடத்தினார். அம்பேத்கர் நகரில் ஆய்வு செய்தபோது அங்குள்ள கீற்று மறைப்பை பார்வையிட்டார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஆளுநரை கண்டு அலறியதாகவும், இதை கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் ஆளுநரை சுற்றிவளைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இதை ஆளுநர் தரப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து இணை தலைமை செயலாளர் தெரிவிக்கையில், “கவுரி என்பவரது வீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை ஆளுநர் பார்வையிட இருந்தார். ஆனால் அதை ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் துறை பெண் அதிகாரியும், ஆட்சியரும்தான் முதலில் சென்றனர்.

அவர்களை பின்தொடர்ந்துதான் ஆளுநர் சென்றார்” என்று தெரிவித்துள்ளார். இதேபோல் கடலூரில் இருந்து சென்னை திரும்பியபோது மாமல்லபுரம் அருகே ஆளுநரின் கான்வாய் வாகனம் விபத்தை ஏற்படுத்தவில்லை என்றும் மாவட்ட காவல் துறை வாகனமே விபத்தை ஏற்படுத்தியது என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.