சென்னை:

ஆளுநர் முக்கிய பிரமுகர்களின் வாகன விபத்துக்கள் குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் திரு ஆர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், முக்கிய பதவிகள் வகிப்பவர்கள் பயணத்தின் போது பாதுகாப்பிற்காக முன்னேற்பாடுகள் செய்வதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதில் பயணப்படும் முக்கிய பிரமுகர்கள் உயிர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் செல்லும் வழியில் எதிர்ப்படும் உயிர்களும் முக்கியம்தான்.

இதை உணர்ந்துதான் அவர்கள் வாகனத்திற்கு முன் செல்லும் பாதுகாப்பு வாகனங்கள் சாலையில் சைரன் மூலம் எச்சரிக்கை செய்வதும், போக்குவரத்துக்கு காவல்துறை தகுந்த முறையில் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதும் கடைபிடிக்க படுகின்றன.

ஆனால், சில சமயங்களில் அதி வேகமாக வரும் பாதுகாப்பு வாகனங்களும் அதனை பின் தொடரும் அனைத்து வாகனங்களும் எதிர்பாராத நொடியில் சில விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது. இன்றும் ஒரு முக்கிய பதவியில் உள்ள ஒருவரின் பாதுகாப்பு வாகனத்தின் மூலம் விபத்து நிகழ்ந்திருக்கிறது என்று கேள்வி படுகிறோம்.

இந்த விபத்தில் மூன்று உயிர்களை நாம் இழந்தது துரதிஷ்டமானது; இந்த விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இது போன்ற விபத்துகள் எதிர்காலத்தில் நிகழாமல் தவிர்க்க பிரமுகர்களின் வாகனங்களுக்கும் ஒரு குறித்த வேகம் நிர்ணயிக்கபட வேண்டும்.

இதனை அந்த வாகனங்களில் பயணம் செய்யும் தலைவர்களும், பிரமுகர்களும் கண்டிப்பாக உறுதி செய்யவேண்டும். அவர்கள் வழி முழுவதும் எச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து காவல்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏன் அடிக்கடி நிகழ்கிறது என்பதற்கு காரணத்தை துல்லியமாக அறிந்து போக்குவரத்து காவல்துறை, நெடுஞ்சாலை துறைகள் இணைந்து சரியான பாதுகாப்பான வழிமுறையை அறிமுகப்படுத்தவேண்டும்.

பல விபத்துகள் நிகழ்ந்த பிறகு, “இது விபத்து பகுதி” என்று அறிவுறுத்துவதற்கு பதில், பல்வேறு கோணங்களில் வாகன இயக்கத்தை வல்லுநர்களை வைத்து ஆய்வு செய்து, அதற்கு ஏற்றாற்போல நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இறந்த நபர்கள் கார்த்திகேயன், சுரேஷ் மற்றும் கவுசல்யா அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து, அரசாங்கம் இவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்” இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.