டில்லி,
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், வரும் 21ந்தேதி டிடிவி தினகரன் டில்லி கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அன்று டிடிவி-ஐ ஆஜராக உத்தரவிட்டி ருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற, டில்லி தேர்தல் கமிஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது டில்லி போலீசார் கடந்த13ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து வரும் 21ந்தேதி கோர்ட்டில் ஆஜராக அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. அதைத்தொடர்ந்து தேர்தல் கமிஷன் இரட்டை இலையை முடக்கியது. அதை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி, தேர்தல் கமிஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க கூறப்பட்ட புகார் காரணமாக தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவரது வாக்குமூலத்தை தொடர்ந்து அதே மாதம் 25 ம் தேதி டிடிவி தினகரனை டில்லி காவல்துறை கைது செய்து திகார் சிறை யில் அடைத்தது. அவர் ஜூன் 1 ம் தேதி ஜாமீனில் வெளி வந்தார்.
ஏஙற்கனவே கடந்த ஜூலை மாதம் டில்லி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டிடிவி பெயர் இடம்பெற வில்லை. இந்நிலையில், கடந்த 13ந்தேதி வழக்கு நடைபெற்று வரும் டில்லி மாவட்ட தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
சுமார் 272 பக்க துணை குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரன், மல்லி கார்ஜூனா, சுகேஷ் சந்திர சேகர், நத்துசிங், புல்கித் குந்த்ரா, பி.குமார், லலித் குமார், ஜெய்விக்ரம் ஹான், நரேந்திரஜெயின் ஆகிய 9 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
அதில், டிடிவி மீது, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 120பி (கிரிமினல் சதி), 201 (சாட்சியங்களை அழித்தல்) மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக டி.டி.வி.தினகரன் 21-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று டில்லி கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டுள்ளார்.
தற்போது ஜாமீனில் இருக்கும் டிடிவி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கி உள்ளார்.
வரும் 21ந்தேதி அன்றுதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்றுதான் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கருணாநிதியின் மகள் கனிமொழி மீதான 2ஜி முறைகேடு வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.