கோபி:
சிறப்பாக இயங்கி வரும் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு தனது தனிப்பட்ட விரோதம் காரணமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மூடுவிழா நடத்தத் திட்டமிடுகிறார் என்று புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் ஆங்கில மோகத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமிழுக்கு மூன்றாம் இடம் கொடுக்கின்றன பெரும்பாலான தனியார் பள்ளிகள். இன்னொரு புறம் அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி வந்துவிட்டது. இதனால் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத ஒரு தலைமுறை உருவாகிவிட்டது.
இந்த நிலையில் தமிழ் மொழியைக் காக்கவும் தரமான கல்வியை அளிக்கவும் சமூக ஆர்வலர்கள் தமிழகம் முழுதும் தாய்த்தமிழ்ப் பள்ளிகளைத் துவங்கினார்கள். நல்ல தமிழில் பாடங்கள், அதோடு ஆங்கிலத்திலும் சிறப்புப் பயிற்சி என தரமான கல்வியோடு மாணவர்களின் இதர திறமைகளையும் வளர்க்கும் பள்ளிகளாக இவை சிறப்பாக செயல்பட்டன.
பொருளாதார சூழல் காரணமாக கட்டிடங்கள் இன்றி, ஓலைக் குடிசைகளிலேயே பெரும்பாலான தாய்த்தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டன. இந்த நிலையில் கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு குழந்தைகள் பலர் பலியாக.. பள்ளி கட்டிடங்களுக்கான விதிகளை கடுமையாக்கியது தமிழக அரசு.
ஏற்கெனவே சிரமமான பொருளாதார சூழலில் சிக்கித் தவித்து வந்த தாய்த்தமிழப்பள்ளிகள், புதிதாக கட்டிடங்கள் கட்ட இயலாமல் மூடப்பட்டன.
ஆனாலும் இந்த சூழலையும் தாக்குப்பிடித்து அரசின் உத்தரவுக்கு ஏற்ப தமிழகம் முழுதும் இருபது தாய்த்தமிழப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்த பள்ளிகளில் கோபியில் உள்ள தாய்த்தமிழ்ப் பள்ளி மட்டுமே அரசு உதவி பெறும் பள்ளியாக இயங்கி வருகிறது. இங்கு சுமார் 150 மாணவர்கள் படித்துவருகிறார்கள்.
தற்போது இந்தப் பள்ளியும் மூடப்படும் அபாயத்தில் இருக்கிறது.
இது குறித்து பள்ளியின் தாளாளர் வெ. குமணனிடம் பேசினோம்.
அவர், “கோபி காந்தி நகர் பகுதியில் 1997ம் ஆண்டு இந்த தாய்த்தமிழ்ப்பள்ளி துவங்கப்பட்டது. வாடகை இடத்தில் செயல்படும் இந்தப்பள்ளியை சொந்த இடத்துக்கு மாற்ற கடந்த பல வருடங்களாகவே முயற்சி நடந்துவருகிறது. ஆனாலும் பயனில்லை.
கோபி நகராட்சி, கடந்த 2008ம் ஆண்டு, இந்தப் பள்ளிக்காக எண்பது சென்ட் இடத்தை அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் தாய்த்தமிழ்ப்பள்ளியைப் பற்றி புரிந்துகொள்ளாத சிலர், இதை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். அதனால் அந்த முயற்சி தடைபட்டது.
ஆனால் அந்த நபர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஏ.ஆர். சோமசுந்தரம் என்பவரே, பிறகு தாய்த்தமிழ்ப்பள்ளியின் சிற்பபைப் புரிந்துகொண்டார். இரண்டு வருடங்களுக்கு முன் கோபி தமிழ் நகரில் பழனி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள 40 சென்ட் இடத்தை பள்ளிக்காக பயன்டுத்திக்கொள்ள ஏற்பாடு செய்தார். ஆனால் அதையம் எதிர்த்து சிலர் அரசுக்கு பெட்டிசன்கள் அளித்தனர். ஆகவே அந்த முயற்சியும் தடைபட்டது.
இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து தீர்ப்பு வந்தது. குறிப்பிட்ட இடத்தை பள்ளி, மருத்துவமனை போன்ற பொதுக்காரியங்களுக்காக பயன்படுத்தலாம் என்று தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் அந்த இடத்தை தரவும் அரசுத் தரப்பு யோசிக்கிறது.
நகராட்சிக்குள் மூடப்பட்ட பாலவித்யா தொடக்கப்பள்ளியிலாவது, தாய்த்தமிழ்ப்பள்ளி செயல்பட அனுமதியுங்கள் என்று அரசுத் தரப்பிடம் கோரிக்கை வைத்தோம்.
கோபி அருகில் எல். கள்ளிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி மூடப்பட்டு கிடக்கிறது. அதிலாவது செயல்பட அனுமதியுங்கள் என்று கோரினோம்.
இதை எதையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இந்தத் தாய்த்தமிழ்ப்பள்ளியை அரசே எடுத்து நடத்தட்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். அதுவும் கண்டுகொள்ளப்டவில்லை.
தற்போது பள்ளி இயங்கும் இடத்தின் உரிமையாளர், இடத்தைக் காலி செய்ய சொல்வதால் பள்ளியை மூடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது” என்று வருத்தத்தோடு சொல்லி முடித்தார் குமணன்.
கோபி பகுதி மக்கள், “பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையின் தனிப்பட்ட பகை உணர்வால்தான் தாய்த்தமிழ்ப்பள்ளி மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது” என்கிறார்கள்.
மேலும் அவர்கள், “தி.மு.க.வைச் சேர்ந்த குமணனின் அப்பா ஜி.டி. வெங்கிடு 1996ல் கோபி தொகுதியில் போட்டியிட்டு செங்கோட்டையனை தோற்கடித்தார். கடந்த 2006ல் ஜி.டி. வெங்கிடுவின் இளைய மகன் மணிமாறன் கோபி தொகுதியில் செங்கோட்டையனை எதிர்த்து போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்.
இப்படி தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு தனக்கு சவாலாக விளங்கும் குடும்பத்தைச் சேர்ந்த குமணன் தாளாளராக இருப்பதால் தாய்த்தமிழ்ப்பள்ளியின் இயக்கத்தை நிறுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விரும்புகிறார்.
அவரை பள்ளித்தாளாளர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பல முறை சந்தித்து நிலையை எடுத்துச் சொல்லி கோரிக்கை வைத்தனர். மிக எளிதாகத் தீர்க்கக்கூடிய இந்த விசயத்தில் செங்கோட்டையன் பாராமுகமாகவே இருக்கிறார்” என்றனர் ஆதங்கத்துடன்.
மீண்டும் தாய்த்தமிழ்ப் பள்ளி தாளாளர் குமணனை தொடர்புகொண்டு, இது குறித்து கேட்டோம்.
அதற்கு அவர், “தாய்த்தமிழ்ப்பள்ளி என்பது அனைவருக்கும் பொதுவான விசயம். இதில் அரசியலை நுழைக்க நான் விரும்பவில்லை. அமைச்சர் செங்கோட்டையனும் அப்படி நினைத்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன்” என்றதோடு முடித்துக்கொண்டார்.
சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பல சிறப்பான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அனைவரும் அமைச்சர் செங்கோட்டையனை பாராட்டுகிறார்கள்.
இந்த நிலையில், தாய்த்தமிழ்ப்பள்ளி மூடப்பட செங்கோட்டையன் காரணமாகலாமா என்பதுதான் அனைவரின் கேள்வியும்.