டில்லி,

ரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

பொதுவாக நவம்பர் டிசம்பர் மாதங்களில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்ற தேர்தல் காரணமாக பாராளுமன்ற கூட்டத் தொடர் தள்ளி வைக்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் உள்பட  எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்று குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.

நேற்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின்போது பேசிய மோடி,  மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடரை நன்றாகவும், சுமுகமாகவும், ஆக்கபூர்வமாகவும் நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், நாடாளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கி அடுத்த மாதம் ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கூட்டத்தொடரின்போது முத்தலாக் மசோதா உள்பட   14 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.

இந்த கூட்டத்தொடரில், ஜி.எஸ்.டி வரியால் ஏற்பட்ட பாதிப்புகள், ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள், மீனவர்கள் பிரச்சனை, விவசாயிகளின் பிரச்சனை உட்பட பல முக்கிய பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதன் காரணமாக இந்த கூட்டத்தொடரில் அனல்பறக்கும் விவாதம் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.