சென்னை

வீட்டு வேலை செய்வோருக்கு குறைந்த பட்ச ஊதியத்தை அரசு நிர்ணயிக்க உள்ளது.

மத்திய அரசு அனைத்துப் பணிகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்துள்ளது.   அதையொட்டி தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை குறைந்த பட்ச ஊதியங்களை நிர்ணயம் செய்ய ஒரு குழு அமைத்துள்ளது.    சென்ற வருடம் அமைக்கப்பட்ட இந்தக் குழு தற்போது தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது.

இந்த பரிந்துரைகள் பற்றி பெயர் திரிவிக்க விரும்பாத குழு உறுப்பினர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.   அவர், “வீட்டுப் பணி செய்பவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ஒரு மணிக்கு ரூ. 40 விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.    ஒரு வீட்டில் ஒரு பணியாளர் 4 மணி நேரம் பணி புரிந்தால் அவருக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.4800  ஒவ்வொரு வீட்டிலும் அளிக்க வேண்டும்.

இந்தப் பரிந்துரையில் ஒரு சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என தொழிலாளர் நலத்துறை கூறி உள்ளது.    அந்த திருத்தங்களில் பணி நேரத்துக்கு மேல் செய்யும் வேலைகளுகான ஊதியம் (ஓவர்டைம்), மற்றும் விடுமுறை பற்றி விளக்கம் கேட்டுள்ளது.   இந்த திருத்தங்கள் செய்து முடித்த பின் இன்னும் இரண்டு மாதங்களில் இது அமைச்சகத்துக்கு அனுப்பப் படும்.   இதன் மூலம் வீட்டுப் பணி செய்வோர் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சுமார் ரூ.5000 குறைந்த பட்ச ஊதியமாக பெறுவார்கள்.  வீட்டு வேலைகளில் பொதுவாக பெண்களே பணியில் அமர்த்தப் படுவதால் இது அவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்” எனக் கூறி உள்ளார்.

இது குறித்து வீட்டுப் பணி செய்பவர்களில் ஒருவரான வளர்மதி என்பவர், “எங்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் தேவை இல்லை.   வாழ்க்கை நடத்த தேவையான ஊதியம் தேவை.  எங்களுக்கு கணவரின் ஆதரவு இல்லாததால் தான் இந்த வீட்டு வேலைகள் செய்கிறோம்.  நாங்கள் எங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு,  போக்குவரத்துச் செலவு ஆகியவைகளையும் கவனிக்க வேண்டும்.  நாங்கள் குடியிருந்தது ஆற்றங்கரை எனக் கூறி இங்கிருந்து 20 கிமீ தள்ளி உள்ள குடிசை மாற்று வாரியத்துக்கு குடி பெயர்க்கப் பட்டுள்ளோம்.   அதனால் போக்குவரத்து செலவு திடீரென அதிகரித்துள்ளது.   எனவே எங்களுக்கு மணிக்கு ரூ.70 என நிர்ணயித்தால் வசதியாக இருக்கும்” எனக் கூறி உள்ளார்.